கெடா, 22 நவம்பர் 2026 : கெடா மாநிலப் பள்ளிகளுக்கு இடையிலான கராத்தேப் போட்டி 2026இல் சுங்கைப்பட்டாணி சரஸ்வதி தமிழ்ப்பள்ளி ஒட்டுமொத்தச் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது. கடந்த நவம்பர் 14ஆம் தேதி கூலிம், பாலிடெக்னிக் துவாங்கு சுல்தானா பஹியா வளாகத்தில் கெடா மாநில கராத்தே சங்கம் ஏற்பாட்டில் இப்போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில் சரஸ்வதி தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தங்களது திறமை, கட்டுப்பாடு மற்றும் விடாமுயற்சியை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த வெற்றியைப் பெற்றனர். இந்த வெற்றிக்குக் கராத்தே வீரர்களுக்குப் பயிற்சியும் வழிகாட்டுதலும் வழங்கிய கெடா மாநில கராத்தே சங்கத் தலைவர் கன்சோ மாஸ்டர் டாக்டர் எஸ். ஸ்டாலினுக்கு பள்ளி நிர்வாகம் நன்றி தெரிவித்தது.
மேலும், பயிற்சியாளர்கள், பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரின் தொடர் ஆதரவுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. சரஸ்வதி தமிழ்ப்பள்ளி மாணவர்களின் இந்தச் சாதனை, பள்ளிக்கும் தமிழ்ச் சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளதுடன், எதிர்காலத்தில் மேலும் பல விளையாட்டுப் போட்டிகளில் சாதிக்க மாணவர்களுக்கு ஊக்கமாக அமைந்துள்ளது.







