என் தமிழ்

இந்திய சமூகத்தினருக்கான தொழில்முனைவோர் வாய்ப்புகள் தொடர்ந்து விரிவுபடுத்தப்படும் – டத்தோஶ்ரீ ரமணன்

கோலாலம்பூர், 22 நவம்பர் 2026 : இந்திய சமூகத்தினரிடையே தொழில்முனைவோர் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன், ஏற்கெனவே தொழில் நடத்தி வருபவர்களின் வணிக வளர்ச்சிக்கும் கூடுதல் ஆதரவு வழங்க மலேசிய மடானி அரசாங்கம் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும் என மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, இந்திய இளைஞர்கள் சொந்தமாகத் தொழில் தொடங்குவதற்குத் தேவையான நிதி வசதிகளையும் வழிகாட்டுதலையும் ஏற்படுத்திக் கொடுப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக அவர் கூறினார். இதற்காகப் பல்வேறு அமைச்சுகள் மற்றும் அரசாங்க நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களுடன் மித்ராவின் முயற்சிகளும் இணைக்கப்பட்டுள்ளன.

இந்திய சமூகத்தைச் சேர்ந்த தொழில்முனைவோருக்கு, குறிப்பாக பி40 மற்றும் எம்40 பிரிவினருக்கு மானியங்கள் மற்றும் தொழில் தொடக்க மூலதனம் வழங்கும் நோக்கில், மித்ரா வழியாக RM50 மில்லியன் ஒதுக்கீட்டில் ‘உயர்வு மடானி’ திட்டம் செயல்படுத்தப்படுவதாக ரமணன் தெரிவித்தார்.

செந்தூலில் உள்ள எச்.ஜி.எச். மாநாட்டு மண்டபத்தில் கோலாலம்பூர் – சிலாங்கூர் இந்திய வர்த்தக, தொழில்துறை சம்மேளனம் (KLSICCI) நடத்திய 2026ஆம் ஆண்டு தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்ச்சியில் உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

தொழில் தொடங்கும் ஆரம்ப நிலையில் இளைஞர்கள் எதிர்கொள்ளும் நிதிச் சவால்களைக் குறைப்பதற்கும், அவர்களுக்குத் தேவையான ஆதரவை வழங்குவதற்கும் அரசாங்க அமைப்புகள், நிதி நிறுவனங்கள் மற்றும் KLSICCI போன்ற வர்த்தகச் சம்மேளனங்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மித்ராவும் KLSICCI-யும் இணைந்து கடந்த 2020 மற்றும் 2022ஆம் ஆண்டுகளில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக இரண்டு தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டங்களை முன்னெடுத்ததாகவும், அவற்றுக்காக RM4 மில்லியனுக்கும் அதிகமான நிதி அங்கீகரிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அவற்றில் 2022ஆம் ஆண்டு செயல்படுத்தப்பட்ட திட்டத்தின் வாயிலாக நாடு முழுவதும் 905 இந்தியத் தொழில்முனைவோர் பயனாளிகளாக இலக்கு வைக்கப்பட்டனர். இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொருவருக்கும் அதிகபட்சமாக RM5,000 மதிப்பிலான வணிக உபகரண உதவிகள் வழங்கப்பட்டன.

இதனிடையே, சில்லறை வணிகம், உற்பத்தி, கட்டுமானம் மற்றும் தொழில்முறை சேவைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியத் தொழில்முனைவோர் ஆற்றி வரும் பங்களிப்பையும் ரமணன் பாராட்டினார்.

முந்தைய தலைமுறையினர் உருவாக்கிய தொழில் அனுபவங்களையும் வெற்றியையும் அடுத்த தலைமுறையினர் முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும் என்றும், இளைஞர்கள் புதிய தொழில்களைத் தொடங்கி இந்திய சமூகத்தின் தொழில்முனைவோர் வளர்ச்சியைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

Scroll to Top