கோலாலம்பூர், 21 நவம்பர் 2026 : மலேசிய மனிதவள அமைச்சின் (KESUMA) தீபாவளிக் கொண்டாட்டம், 130 தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மற்றும் ஆதரவற்றோர் இல்லவாசிகளுடன் ஒற்றுமை, அன்பு மற்றும் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளும் நிகழ்வாக நடைபெற்றது.
அமைச்சின் உயர்மட்ட நிர்வாகத்தினர் மற்றும் பணியாளர்களுடன் இணைந்து நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கோலாலம்பூர் தம்பூசாமி தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த 130 மாணவர்களும், கருணை இல்லம் மற்றும் அன்பு இல்லம் ஆகிய ஆதரவற்றோர் இல்லங்களைச் சேர்ந்தவர்களும் பங்கேற்றனர்.
அவர்களுடன் தீபாவளியைக் கொண்டாடியது மிகுந்த மகிழ்ச்சியையும் மனநிறைவையும் அளித்ததாக மனிதவளத் துறை துணை அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார். பல்லின மக்களிடையே ஒற்றுமையை வளர்ப்பதும், மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்வதும், எவரும் புறக்கணிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்வதுமே தீபாவளியின் உண்மையான நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிகழ்ச்சியில் வேளாண்மை மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது சாபு, பிரதமர் துறை (சபா மற்றும் சரவாக் விவகாரங்கள்) அமைச்சர் டத்தோ முஸ்தபா சக்முட் ஆகியோரும் கலந்துகொண்டனர். ஒற்றுமை, அக்கறை மற்றும் நல்லிணக்க உணர்வுகள் தொடர்ந்து வலுப்பெற்று, அன்பும் மனிதநேயமும் நிறைந்த மடானி சமூகத்தை உருவாக்க வேண்டும் என்றும் ரமணன் ராமகிருஷ்ணன் வாழ்த்தினார்.







