கோலாலம்பூர், 21 நவம்பர் 2026 : இந்திய சமூகத்தின் பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்திற்காக கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் இந்திய வர்த்தக, தொழில்துறை சம்மேளனம் (KLSICCI) மேற்கொண்டு வரும் பணிகள் பாராட்டத்தக்கவை என மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
KLSICCI ஏற்பாட்டில் நடைபெற்ற தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், இந்திய சமூகத்தினருக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்குவதிலும், அவர்களின் திறமைகளை மேம்படுத்துவதிலும் சம்மேளனம் தொடர்ந்து பங்களித்து வருவதாகக் குறிப்பிட்டார்.



குறிப்பாக, கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்முனைவு மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் இந்திய சமூகத்தினர் முன்னேறுவதற்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துவதில் KLSICCI ஆற்றி வரும் பணி முக்கியமானது என்றார்.
மேலும், இந்தியத் தொழில்முனைவோரின் வளர்ச்சியை ஊக்குவிப்பதுடன், நாட்டின் வர்த்தகத் துறையில் அவர்களின் பங்களிப்பை அதிகரிக்கச் சம்மேளனம் மேற்கொள்ளும் முயற்சிகளையும் அவர் பாராட்டினார்.
சமூகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு தனிநபர்களின் ஒத்துழைப்பும், சமூக அமைப்புகளின் தொடர்ச்சியான ஈடுபாடும் அவசியம் எனக் குறிப்பிட்ட அவர், இந்திய சமூகத்தின் முன்னேற்றத்திற்காக KLSICCI தொடர்ந்து ஆற்றி வரும் பங்களிப்பை வரவேற்றார். தீபாவளியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சி, வர்த்தகர்கள், தொழில்முனைவோர் மற்றும் சமூகப் பிரதிநிதிகள் ஒன்றுகூடி நல்லுறவை வளர்த்துக்கொள்ளும் வாய்ப்பாகவும் அமைந்தது.









