என் தமிழ்

அமெரிக்க டாலருக்கு நிகரான ரிங்கிட் மதிப்பு மாற்றமின்றி தொடக்கம்

கோலாலம்பூர், 20 நவம்பர் 2026 : உலகளாவிய நிச்சயமற்ற சூழலுக்கு மத்தியில், வெள்ளிக்கிழமை காலை அமெரிக்க டாலருக்கு நிகரான ரிங்கிட் மதிப்பு ஏறக்குறைய மாற்றமின்றி வர்த்தகத்தைத் தொடங்கியது. காலை 8 மணியளவில் ரிங்கிட் 4.1105/1155 என்ற நிலையில் பதிவானது. வியாழக்கிழமை வர்த்தக முடிவில் அது 4.1100/1145 ஆக இருந்தது.

மலேசியாவின் மூன்றாவது காலாண்டுப் பொருளாதார வளர்ச்சி 5.5 விழுக்காடாகப் பதிவாகியுள்ளது. இது சந்தை கணிப்பான 5.3 விழுக்காட்டைவிட அதிகமாக இருந்தாலும், அமெரிக்க டாலரின் வலுவான நிலையும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மையும் ரிங்கிட்டின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துகின்றன.

அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை மேலும் உயர்த்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பு டாலரின் மதிப்பை வலுப்படுத்துவதாக பேங்க் முஆமலாட் மலேசியாவின் தலைமைப் பொருளாதார நிபுணர் டாக்டர் முகமது அஃப்சானிசாம் அப்துல் ரஷீத் தெரிவித்தார். இதனால், இன்றைய வர்த்தகத்தில் ரிங்கிட் 4.10 முதல் 4.11 வரை நிலைத்திருக்கலாம் என்றும் அவர் கணித்தார்.

முக்கிய வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட் கலவையான நிலையைப் பதிவு செய்தது. சிங்கப்பூர் டாலர் மற்றும் தாய் பாட் ஆகியவற்றுக்கு எதிராக அதன் மதிப்பு உயர்ந்தது. அதேவேளை, ஜப்பானிய யென் எதிராகச் சற்றுக் குறைந்தது. பிலிப்பைன்ஸ் பேசோ மற்றும் இந்தோனேசிய ரூபியா ஆகியவற்றுக்கு எதிராக மாற்றமின்றி இருந்தது.

Scroll to Top