சீனா, 20 நவம்பர் 2026 : மலேசியாவில் புதிய முதலீடுகளை மேற்கொள்வது தொடர்பாக, சீனாவின் நான்கு முன்னணி நிறுவனங்களின் பிரதிநிதிகளைப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஷென்செனில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
மருத்துவச் சாதன உற்பத்தி நிறுவனமான மைண்ட்ரே (Shenzhen Mindray Bio-Medical Electronics), மலேசியாவில் உற்பத்தி நிலையம் அல்லது சேவை மையம் அமைப்பதற்கான வாய்ப்புகளை ஆராய்ந்து வருகிறது. லித்தியம் அயன் மின்கலங்களுக்கான ரசாயனப் பொருட்களைத் தயாரிக்கும் டியன்சி (Guangzhou Tinci Materials Technology), மலேசியாவில் உற்பத்தியைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளது.
இதற்கிடையே, சிலாங்கூரில் மின்கலங்களுக்கான கத்தோடு பொருட்களை உற்பத்தி செய்ய எக்ஸ்டிசி நியூ எனர்ஜி மெட்டீரியல்ஸ் (XTC New Energy Materials) முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது. கெடா மாநிலம் கூலிம் உயர் தொழில்நுட்பப் பூங்காவில் செயல்படும் கேப்கெம் டெக்னாலஜி (Shenzhen Capchem Technology), இரண்டாவது தொழிற்சாலையை அமைத்து உற்பத்தித் திறனை அதிகரிப்பது குறித்து ஆய்வு செய்து வருகிறது.
இந்த முதலீடுகள் மூலம் உள்ளூர் நிறுவனங்களுக்கான வாய்ப்புகள், தொழில்நுட்பப் பரிமாற்றம் மற்றும் உயர்திறன் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதே மலேசியாவின் நோக்கம் என அன்வார் தெரிவித்தார்.







