மணிலா, 17 நவம்பர் 2026 : 49ஆவது ஆசியான் உச்சி மாநாட்டில் பங்கேற்ற மலேசிய ஊடகவியலாளர்களுடனான கூட்டுச் செய்தியாளர் சந்திப்பில், மாநாட்டின்போது நடைபெற்ற முக்கியக் கூட்டங்கள் மற்றும் கலந்துரையாடல்களின் முன்னேற்றங்களைப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பகிர்ந்துகொண்டார்.
நட்பு நாடுகளுடனான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது, எரிசக்தி, வர்த்தகம், செயற்கை நுண்ணறிவு (AI), இணையப் பாதுகாப்பு மற்றும் சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி உள்ளிட்ட துறைகளில் பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
தென் சீனக் கடல் விவகாரம், மியன்மாரின் தற்போதைய நிலவரம் மற்றும் நாடுகளுக்கு இடையிலான புவிசார் அரசியல் பதற்றங்கள் குறித்தும் கருத்துகள் பரிமாறப்பட்டன. பிராந்தியத்தின் அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்த, பேச்சுவார்த்தை, பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் அமைதியான தீர்வுகளுக்கு முன்னுரிமை அளிக்கும் ஆசியான் கொள்கைகளில் மலேசியா தொடர்ந்து உறுதியாக இருப்பதாக அன்வார் கூறினார்.
இந்த ஆண்டு ஆசியான் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள பிலிப்பைன்ஸ், ஆக்கபூர்வமான விவாதங்கள் நடைபெறுவதையும் அவற்றின் மூலம் முன்னேற்றம் ஏற்படுவதையும் உறுதிசெய்ததற்காக அவர் பாராட்டுத் தெரிவித்தார். ஆசியான் தனது ஒற்றுமையை மேலும் வலுப்படுத்தி, ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதுடன், அதன் பயன்கள் பிராந்திய மக்களைச் சென்றடைவதையும் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அன்வார் வலியுறுத்தினார்.







