என் தமிழ்

டிஜிட்டல் திறன்கள் மூலம் பெண்களுக்கு புதிய வாய்ப்புகள் : ‘எம்பவர் ஹெர் டிஜிட்டல் 2026’ நிகழ்ச்சியில் கோபிந்த் சிங் தியோ வலியுறுத்தல்

சிலாங்கூர், 17 நவம்பர் 2026 : செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சியின் பயன்கள் அனைத்து மக்களையும் சென்றடைவதை உறுதிப்படுத்தும் முயற்சியில், பெண்களின் டிஜிட்டல் திறன்களையும் தொழில்நுட்ப அறிவையும் மேம்படுத்துவது அவசியம் என்று டிஜிட்டல் அமைச்சர் கோபிந்த் சிங் தியோ வலியுறுத்தினார்.

டிஜிட்டல் நேஷனல் பெர்ஹாட் (DNB) மற்றும் பண்டார் உத்தாமா சட்டமன்றத் தொகுதியின் பெண்கள் மேம்பாட்டு மையம் (PWB) இணைந்து நடத்திய ‘எம்பவர் ஹெர் டிஜிட்டல் 2026’ நிகழ்ச்சி இதற்கான முக்கிய முயற்சியாக அமைந்ததாக அவர் குறிப்பிட்டார்.

இந்நிகழ்ச்சியில், மலேசியக் காவல்துறையுடன் இணைந்து நடத்தப்பட்ட ‘பிஜாக் டிஜிட்டல்’ திட்டத்தின் மூலம் இணையப் பாதுகாப்பு விழிப்புணர்வு வழங்கப்பட்டது. மேலும், டிக்டாக் தளத்தைப் பயன்படுத்தி வருமானம் ஈட்டுவதற்கான பயிற்சிப் பட்டறையும் நடத்தப்பட்டது. பெண்கள் எதிர்கொள்ளும் மன அழுத்தம் மற்றும் உணர்வுசார் சுமைகள் குறித்து ‘தி இன்விசிபிள் லோட்: மெண்டல் வெல்னஸ் அண்ட் தி எமோஷனல் பர்டன் விமன் கேரி’ என்ற தலைப்பில் கருத்தரங்கும் இடம்பெற்றது.

இந்த நிகழ்ச்சிகள் பெண்களுக்குத் தேவையான நடைமுறை அறிவையும் டிஜிட்டல் திறன்களையும் வழங்குவதுடன், தொழில்நுட்பம் சார்ந்த உலகில் தன்னம்பிக்கையுடன் செயல்படுவதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்துவதாக கோபிந்த் சிங் தியோ தெரிவித்தார்.

2030ஆம் ஆண்டுக்குள் மலேசியாவை செயற்கை நுண்ணறிவு நாடாக உருவாக்கும் இலக்கை நோக்கிப் பயணிக்கும் நிலையில், பெண்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துபவர்களாக மட்டும் இல்லாமல், தொழில்முனைவோர், புத்தாக்கங்களை உருவாக்குபவர்கள் மற்றும் நாட்டின் டிஜிட்டல் எதிர்காலத்தை வழிநடத்துபவர்களாகவும் உருவாக வேண்டும் என்றார். டிஜிட்டல் பொருளாதாரத்தில் பெண்கள் அதிகளவில் பங்கேற்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துவதன் மூலம், அனைவரையும் உள்ளடக்கிய, வலிமையான மற்றும் முன்னேற்றமான மலேசியாவை உருவாக்க முடியும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Scroll to Top