என் தமிழ்

அரசின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் ஊடகங்களின் பங்கு மகத்தானது – ரமணன் பாராட்டு

கோலாலம்பூர், 13 நவம்பர் 2026 : அரசாங்கத்தின் கொள்கைகள், திட்டங்கள் மற்றும் முன்னெடுப்புகளைப் பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பதில் ஊடகங்கள் முக்கியப் பங்காற்றி வருவதாக மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

தாம் கடந்த டிசம்பர் 12ஆம் தேதி மனிதவள அமைச்சராகப் பொறுப்பேற்றது முதல், அமைச்சின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் தொடர்பாக 40,000-க்கும் மேற்பட்ட செய்திகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் இடையிலான முக்கியத் தொடர்புப் பாலமாக ஊடகங்கள் விளங்குவதாகக் கூறிய அவர், தகவல்களைப் பொறுப்புடனும் நெறிமுறைகளுடனும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஊடகவியலாளர்களின் பணியைப் பாராட்டினார்.

ஒரு மண்டபத்தில் தாம் பேசும்போது அதிகபட்சம் 500 பேர் மட்டுமே தகவல்களைக் கேட்க முடியும் என்றும், ஆனால் ஊடகங்கள் வாயிலாக அந்தத் தகவல்கள் லட்சக்கணக்கான மக்களைச் சென்றடைவதாகவும் அவர் தெரிவித்தார். ஊடகப் பணி எளிதானதல்ல என்றாலும், ஊடகவியலாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டு வருவதாகவும் அவர் புகழாரம் சூட்டினார். பெர்கேசோ ஏற்பாட்டில் நடைபெற்ற 2026ஆம் ஆண்டுக்கான ஊடக விருது விழாவில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இவ்வாண்டு முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘கென்சானா விருது’, அனைத்து விருதுப் பிரிவுகளிலும் சிறந்த படைப்பைத் தேர்ந்தெடுத்து, சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய ஊடகப் பணிகளுக்கு வழங்கப்படும் உயரிய அங்கீகாரமாக அமையும் என்றும் ரமணன் கூறினார்.

மேலும், சர்வதேச சமூகப் பாதுகாப்புச் சங்கத்தின் (ISSA) தலைவராக பெர்கேசோ தலைமைச் செயல் அதிகாரி டத்தோஸ்ரீ டாக்டர் முகமட் அஸ்மான் அஜீஸ் முகமட் நியமிக்கப்பட்டிருப்பதையும் அவர் பாராட்டினார். 165 நாடுகளின் வாக்குகளின் அடிப்படையில் கிடைத்துள்ள இந்த நியமனம், மலேசியாவின் சமூகப் பாதுகாப்பு அமைப்புக்குக் கிடைத்துள்ள சர்வதேச அங்கீகாரம் என அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, 50 ஆண்டுகள் ஊடகத் துறையில் பணியாற்றியதுடன், மக்கள் ஓசை நாளிதழில் 15 ஆண்டுகள் மூத்த ஆசிரியராகச் சேவையாற்றிய மறைந்த டாக்டர் பி.ஆர். ராஜனுக்கும் ரமணன் புகழாரம் சூட்டினார்.

இந்நிகழ்வில் பெர்கேசோ தலைவர் டத்தோஸ்ரீ சுபஹான் கமால், மீடியா பிரிமா நிறுவனத்தின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி டத்தோ முகமட் எபெண்டி ஒத்மான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Scroll to Top