என் தமிழ்

நேபாள வெள்ளப் பேரிடர் : பாதிக்கப்பட்ட மலேசியக் குடும்பங்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த கெடா இளவரசிக்கு MASFIH பாராட்டு

கோலாலம்பூர், 13 நவம்பர் 2026 : நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி ஏற்பட்ட கடுமையான வெள்ளப் பேரிடரில் பாதிக்கப்பட்ட மலேசியக் குடும்பங்களைச் சந்தித்து, அவர்களின் துயரங்களைக் கேட்டறிந்து ஆறுதல் வழங்கிய கெடா மாநில ராஜா பெர்மாய்சூரின் இளவரசிக்கு (Raja Puan Muda of Kedah) மலேசிய ஒற்றுமைக் குடும்பங்கள் நம்பிக்கையுடன் (MASFIH) நன்றி தெரிவித்துப் பாராட்டியுள்ளது.

குடும்பத்தினருடனான சந்திப்பு ஏறத்தாழ மூன்று மணி நேரம் நீடித்தது. அவர்களின் அனுபவங்கள், துயரங்கள் மற்றும் காணாமல் போன தங்களின் அன்புக்குரியவர்கள் குறித்த கவலைகளை இளவரசி பொறுமையுடன் கேட்டறிந்ததாக MASFIH தெரிவித்துள்ளது. குடும்பத்தினரின் வேதனையைக் கேட்டபோது இளவரசி கண்கலங்கியதும் அவர்களுக்கு ஆறுதலாக அமைந்ததாகக் குறிப்பிட்டுள்ளது.

இன, மதப் பாகுபாடுகளுக்கு எதிராகக் குரல்

பள்ளிவாசல்கள் எரிக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புபடுத்தி, வெள்ளப் பேரிடர் இறைவனின் தண்டனை எனப் பொருள்படும் வகையில் வெளியான உணர்வற்ற கருத்துகளுக்கு எதிராக இளவரசி தனது பொதுத் தளத்தில் குரல் கொடுத்ததையும் MASFIH பாராட்டியுள்ளது.

மனிதத் துயரத்தை இன, மத அல்லது கலாசார விவாதமாக மாற்றக்கூடாது என்றும், மற்றவர்களின் மதம் அல்லது பின்னணியைப் பகிர்ந்துகொள்ளாவிட்டாலும் அவர்களின் வேதனையைப் புரிந்துகொள்வதே உண்மையான மனிதநேயம் என்றும் இளவரசி வலியுறுத்தியுள்ளார்.

அதிகாரப்பூர்வமாகக் காணாமல் போனதாகப் பதிவு செய்யப்பட்டுள்ள 54 மலேசியர்களில் 42 பேர் இந்துக்கள், 11 பேர் முஸ்லிம்கள், ஒருவர் கிறிஸ்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மத அல்லது இனப் பிரச்சினை அல்ல; பாதிக்கப்பட்ட குடும்பங்கள் அனைவரும் ஒரே துயரத்தையும் நிச்சயமற்ற நிலையையும் எதிர்கொள்ளும் மனிதநேயப் பேரிடர் என MASFIH சுட்டிக்காட்டியுள்ளது.

குடும்பங்களின் கோரிக்கை

MASFIH அமைப்பின் இணை நிறுவனர், ஒருங்கிணைப்பாளர் மற்றும் பேச்சாளரான டாக்டர் மணிவண்ணன் ரெத்தினம், காணாமல் போன கோமதி ரெத்தினத்தின் மூத்த சகோதரரும் அடுத்த உறவினருமாவார். இளவரசியின் அக்கறையும் ஆதரவும் தம்மையும் பாதிக்கப்பட்ட குடும்பங்களையும் நெகிழச் செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தங்களின் மத நம்பிக்கைகளை மற்றவர்கள் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பது குடும்பங்களின் எதிர்பார்ப்பு அல்ல என்றும், காணாமல் போன அன்புக்குரியவர்கள் மரியாதையுடன் நினைவுகூரப்படுவதுடன், அவர்களைத் தேடும் நடவடிக்கைகள் எந்தவிதப் பாகுபாடும் இன்றி தொடர வேண்டும் என்பதே தங்களின் வேண்டுகோள் என்றும் அவர் கூறியுள்ளார்.

இன்னும் 54 மலேசியர்கள் காணாமல் போன நிலையில், அவர்களின் குடும்பங்கள் நம்பிக்கையுடன் காத்திருப்பதாகவும், அவர்களுக்குத் தொடர்ந்து நாட்டின் ஆதரவும் புரிதலும் தேவைப்படுவதாகவும் டாக்டர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார். மக்களின் துயரங்களைக் கேட்டு, பாகுபாடுகளுக்கு எதிராகக் குரல் கொடுத்து, மனிதநேயமே பிரிவினைகளைவிட மேலானது என்பதை உணர்த்திய இளவரசிக்கு MASFIH தனது நன்றியை மீண்டும் தெரிவித்துள்ளது.

Scroll to Top