புத்ராஜெயா, 13 நவம்பர் 2026 : உலகளாவிய டிஜிட்டல் மற்றும் செயற்கை நுண்ணறிவுத் (AI) துறையில் மலேசியா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது. 2026ஆம் ஆண்டுக்கான சர்வதேச மேலாண்மை மேம்பாட்டு நிறுவனத்தின் (IMD) உலக டிஜிட்டல் மற்றும் AI தரவரிசையில், மலேசியா 34ஆவது இடத்திலிருந்து 27ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இந்த முன்னேற்றம், டிஜிட்டல் மற்றும் AI துறைகளில் மலேசியா மேற்கொண்டு வரும் மாற்றங்களுக்குக் கிடைத்துள்ள முக்கிய அங்கீகாரம் என டிஜிட்டல் அமைச்சர் கோபிந்த் சிங் தியோ தெரிவித்துள்ளார். அரசாங்கம், தொழில்துறை, கல்வித்துறை மற்றும் பொதுமக்களின் கூட்டு முயற்சிகளே இதற்குக் காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மலேசிய டிஜிட்டல் செயல்திட்டம் 2030 மற்றும் தேசிய AI செயல்திட்டம் 2026–2030 ஆகியவற்றின் கீழ், தரவு மையங்கள், AI கணினிக் கட்டமைப்புகள் மற்றும் தொழில்நுட்பப் பயன்பாடுகளில் மலேசியா கணிசமான முதலீடுகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், தேசிய AI மாற்றங்களை ஒருங்கிணைக்க ‘AI Malaysia’ அமைப்பும் உருவாக்கப்பட்டுள்ளது.
அடுத்தகட்ட வளர்ச்சிக்காக, டிஜிட்டல் முதலீடுகளின் பொருளாதாரப் பலனை அதிகரித்தல், அனைத்து பொருளாதாரத் துறைகளிலும் AI பயன்பாட்டை விரிவுபடுத்துதல், திறமையான மனிதவளத்தை உருவாக்குதல் மற்றும் டிஜிட்டல் நம்பகத்தன்மை, இணையப் பாதுகாப்பு, நிர்வாகக் கட்டமைப்புகளை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் அரசாங்கம் கவனம் செலுத்தும் என அமைச்சர் தெரிவித்தார்.
இதன் ஒரு பகுதியாக, சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் AI தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த ஊக்குவிக்கப்படுவதுடன், பணியாளர்களுக்கு மறுதிறன் பயிற்சிகளும் வழங்கப்படும். மேலும், AI தொழில்நுட்பத்தின் பொறுப்பான பயன்பாட்டை உறுதிப்படுத்த AI நிர்வாகச் சட்டமூலம் உருவாக்கப்படுவதுடன், AI பாதுகாப்பு மதிப்பீடு மற்றும் தரநிலைகளை மேம்படுத்துவதற்கான தேசிய AI பாதுகாப்பு நிறுவனத்தை நிறுவவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தற்போதைய தரவரிசை முன்னேற்றம் முக்கிய மைல்கல்லாக இருந்தாலும், இதே வளர்ச்சியைத் தொடர்ந்து தக்கவைக்க அனைத்துத் தரப்பினரின் கூட்டு முயற்சிகளும் அவசியம் என கோபிந்த் சிங் தியோ வலியுறுத்தினார். 2030ஆம் ஆண்டுக்குள் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதுடன், அதன் மூலம் புத்தாக்கங்கள், புதிய திறன்கள் மற்றும் தொழில் நிறுவனங்களை உருவாக்கும் அனைவரையும் உள்ளடக்கிய நிலையான AI நாடாக மலேசியாவை உருவாக்குவதே அரசாங்கத்தின் இலக்கு என்றும் அவர் தெரிவித்தார்.







