என் தமிழ்

அந்தோணி லோக்கின் பதவி விலகல் நாட்டிற்குப் பேரிழப்பு – ரமணன் ராமகிருஷ்ணன்

கோலாலம்பூர், 13 நவம்பர் 2026 : போக்குவரத்து அமைச்சர் பதவியிலிருந்து அந்தோணி லோக் விலகியிருப்பது நாட்டிற்குப் பேரிழப்பாகும் என மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அந்தோணி லோக் கொள்கைப் பிடிப்பும் உறுதியான நிலைப்பாடும் கொண்டவர் எனக் குறிப்பிட்ட ரமணன், அவருடன் அமைச்சரவையில் இணைந்து பணியாற்றியதை நினைவுகூர்ந்தார்.

“அவரது பதவி விலகல் எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அவர் எனது நல்ல நண்பர் மட்டுமின்றி, அமைச்சரவை சகாவும்கூட. அவரை நான் இழக்கப் போகிறேன். இருப்பினும், இது அவருடைய தனிப்பட்ட முடிவாகும். அவருடைய நிலைப்பாட்டை நாம் மதித்து ஏற்றுக்கொள்ள வேண்டும். அவரது பதவி விலகல் உண்மையிலேயே ஒரு பேரிழப்பாகும்,” என்றார்.

கோலாலம்பூரில் நடைபெற்ற சமூகப் பாதுகாப்பு நிறுவனமான பெர்கேசோவின் 2026ஆம் ஆண்டு ஊடக விருது விழாவின்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார்.

இதனிடையே, அமைச்சரவை மாற்றம் தொடர்பான முடிவுகளை எடுக்கும் அதிகாரம் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கே உள்ளது என்றும் ரமணன் குறிப்பிட்டார்.

கோலாலம்பூர் உயர் நீதிமன்றம், முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கின் எஞ்சிய சிறைத்தண்டனையை வீட்டுக் காவலில் அனுபவிக்க அனுமதிக்கும் தீர்ப்பை வழங்கியதைத் தொடர்ந்து, அந்தோணி லோக் போக்குவரத்து அமைச்சர் பதவியிலிருந்து உடனடியாக விலகியிருந்தார்.

அவருக்குப் பதிலாகப் புதிய அமைச்சரை நியமிப்பது குறித்துப் பேசுவது தற்போதைக்கு முன்கூட்டிய செயலாகும் என ஜனநாயகச் செயல் கட்சி (ஜசெக) தெரிவித்துள்ளது. அமைச்சரவை மாற்றம் குறித்து விவாதிப்பதற்கு இது மிகவும் ஆரம்பக்கட்டம் என்றும் பிரதமர் அன்வார் ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தார்.

Scroll to Top