கோலாலம்பூர், 09 நவம்பர் 2026 : மலேசியாவின் பல்லின ஒற்றுமையையும் கலாசார நல்லிணக்கத்தையும் பறைசாற்றும் வகையில், மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இல்லத்தில் நடைபெற்ற தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உள்ளிட்ட பல்வேறு இனங்களைச் சேர்ந்த தலைவர்கள் கலந்துகொண்டனர்.
நேற்று நடைபெற்ற இந்த நிகழ்வு, மலேசிய மடானி கோட்பாட்டின் முக்கிய அம்சமான ‘ஒற்றுமை’ உணர்வை வெளிப்படுத்தும் சந்திப்பாக அமைந்ததாக ரமணன் தெரிவித்தார். தமது இல்லத்திற்கு பிரதமர் வருகை தந்தது பெருமகிழ்ச்சி அளிப்பதாகக் குறிப்பிட்ட அவர், மலேசியர்கள் இன, மத, கலாசார வேறுபாடுகளைக் கடந்து பண்டிகைகளைக் குடும்பமாகக் கொண்டாடும் பண்பைக் கொண்டிருப்பதாகக் கூறினார்.



“இந்தியச் சமூகத்துடன் தீபாவளியைக் கொண்டாட பிரதமர் வருகை தந்தது மகிழ்ச்சியளிக்கிறது. அதேவேளையில், இந்தியச் சமூகத்தின் தேவைகள் மற்றும் சவால்கள், குறிப்பாகக் கல்வி, பொருளாதாரம், குடும்ப நலன் ஆகியவற்றிலும் அவர் தொடர்ந்து அக்கறை செலுத்தி வருகிறார்” என்றார்.
இந்நிகழ்வில் சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, பொதுப்பணித்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி, போக்குவரத்துத் துறை அமைச்சர் அந்தோணி லோக் சியூ ஃபூக், கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ ஃபத்லினா சிடேக், கல்வித் துணை அமைச்சர் வோங் கா வோ மற்றும் சிலாங்கூர் மாநில சட்டமன்றத் துணை சபாநாயகர் முகமட் கம்ரி கமாருடின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திறந்த இல்ல உபசரிப்பு என்பது மலேசியாவின் பாரம்பரியங்களில் ஒன்றாகத் திகழ்வதாகக் குறிப்பிட்ட ரமணன், இத்தகைய நிகழ்வுகள் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த மக்களிடையே நேரடித் தொடர்பையும் நெருக்கத்தையும் ஏற்படுத்தி, ஒற்றுமையை மேலும் வலுப்படுத்துவதாகத் தெரிவித்தார்.


நாட்டின் சவால்களை எதிர்கொள்ளும் வேளையில், அனைத்து மக்களும் பரஸ்பர நம்பிக்கையுடனும் ஒற்றுமையுடனும் செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். “ஒரு குறிப்பிட்ட இனத்தின் அல்லது சமூகத்தின் வளர்ச்சியால் மட்டும் ஒரு நாட்டின் வலிமை தீர்மானிக்கப்படுவதில்லை. யாரையும் பின்தங்க விடாமல், அனைத்து மக்களும் ஒன்றிணைந்து முன்னேறுவதில்தான் நாட்டின் உண்மையான வலிமை அடங்கியுள்ளது.
“மலேசிய மக்கள் அமைதியுடனும் நல்லிணக்கத்துடனும் பரஸ்பர புரிந்துணர்வுடனும் வாழ விரும்புகின்றனர். நமது பன்முகத்தன்மை கொண்டாடப்பட வேண்டுமே தவிர, அது மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்தப் பயன்படுத்தப்படக் கூடாது,” என்றார்.
நிறைவாக, மலேசியா முழுவதும் உள்ள இந்து சமூகத்தினருக்குத் தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்த ரமணன், இப்பண்டிகை அனைத்து குடும்பங்களுக்கும் மகிழ்ச்சி, ஆரோக்கியம், செழிப்பு ஆகியவற்றைக் கொண்டுவர வேண்டும் என வாழ்த்தினார்.







