என் தமிழ்

நேபாள வெள்ளப் பேரிடரில் காணாமல் போன 54 மலேசியர்கள்: 76 நாட்களாகியும் பதில் இல்லை – எழுத்துப்பூர்வ விளக்கம் கோரும் MASFIH

கோலாலம்பூர், 09 நவம்பர் 2026 : நேபாளத்தின் கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி ஏற்பட்ட பெருவெள்ளத்தில் காணாமல் போன 54 மலேசியர்களின் நிலை குறித்து 76 நாட்களாகியும் தெளிவான தகவல் கிடைக்காததால், அவர்களது குடும்பத்தினர் தொடர்ந்து மன உளைச்சலையும் சட்டரீதியான குழப்பங்களையும் எதிர்கொண்டு வருவதாக மலேசிய ஒற்றுமைக் குடும்பங்கள் நம்பிக்கையுடன் (MASFIH) அமைப்பு தெரிவித்துள்ளது.

காணாமல் போனவர்களின் குடும்பத்தினர் மலேசியத் தூதரகம் வழியாக இறப்புச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், கோரப்படும் ஆவணம் ‘இறந்ததாகக் கருதப்படும் சான்றிதழா’ (Certificate of Presumed Death) அல்லது வழக்கமான இறப்புச் சான்றிதழா (Death Certificate) என்பது குறித்து இதுவரை தெளிவான விளக்கம் வழங்கப்படவில்லை என அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த வேறுபாடு சொத்துரிமை, காப்புறுதி, கடன்கள் மற்றும் குடும்பத்தினரின் சட்ட உரிமைகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், விண்ணப்பிக்கும் முன்பு முழுமையான விளக்கம் அவசியம் என MASFIH வலியுறுத்தியுள்ளது.

நவம்பர் 3ஆம் தேதி நடைபெற்ற விளக்கக் கூட்டத்தில், நேபாளத்தின் புதிய சட்ட நடைமுறையின்படி பேரிடரால் ஏற்பட்ட மரணம் தொடர்பான ஆவணங்களுக்கான காத்திருப்புக் காலம் 12 ஆண்டுகளிலிருந்து 45 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. மேலும், காணாமல் போன 54 மலேசியர்களின் பெயர்ப் பட்டியல் நேபாள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், கோரப்படும் ஆவணத்தின் சட்ட அடிப்படை, மலேசியாவில் அதன் அங்கீகாரம், தேசியப் பதிவுத் துறை (JPN) மற்றும் சட்டத்துறைத் தலைமைச் செயலகத்தின் (AGC) நிலைப்பாடு, சொத்துரிமை மற்றும் காப்புறுதி மீதான தாக்கம், ஒருவர் உயிருடன் கண்டறியப்பட்டால் சட்டப்பூர்வ நிலையை மீட்டெடுக்கும் நடைமுறை உள்ளிட்ட ஏழு முக்கியக் கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வ பதில் வழங்கப்பட வேண்டும் என MASFIH கோரியுள்ளது.

மேலும், 54 பேரின் பெயர்ப் பட்டியல் ஏற்கெனவே நேபாள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், குடும்பத்தினர் ஏன் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும் என்றும், அரசாங்கங்களுக்கு இடையிலான நேரடி ஒருங்கிணைப்பு (G2G) மூலம் இந்த நடைமுறையை மேற்கொள்ள முடியுமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.

வெளியுறவு அமைச்சருடன் நேரடிச் சந்திப்பு கோரிக்கை

காணாமல் போனவர்களின் அனைத்து குடும்பத்தினரையும் வெளியுறவு அமைச்சர் நேரடியாகச் சந்தித்து விளக்கமளிக்க வேண்டும் என MASFIH கேட்டுக்கொண்டுள்ளது. இச்சந்திப்பில் AGC உயர் அதிகாரி ஒருவரும் பங்கேற்று சட்டரீதியான கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

54 பேரின் தற்போதைய நிலை, டிஎன்ஏ பரிசோதனை மற்றும் பொருத்திப் பார்க்கும் பணிகளின் முன்னேற்றம், நேபாள அதிகாரிகளுடனான ஒருங்கிணைப்பு, ஆவண நடைமுறைகள் ஆகியவை குறித்தும் தெளிவான தகவல்கள் வழங்கப்பட வேண்டும் எனக் கோரியுள்ளது.

இதற்கிடையே, மரணம் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்படாத நிலையில், காணாமல் போனவர்களைக் குறிப்பிடும்போது ‘உயிரிழந்தவர்கள்’ போன்ற சொற்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, ‘காணாமல் போனவர்கள்’ என்றே குறிப்பிட வேண்டும் என MASFIH வலியுறுத்தியுள்ளது.

தகவல் பரிமாற்றத்தில் சுயாதீனத் தணிக்கை

நெருக்கடி காலத்தில் குடும்பத்தினருடன் மேற்கொள்ளப்பட்ட தகவல் பரிமாற்றம், புகார்களைக் கையாளும் முறை, அரசுத் துறைகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு மற்றும் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட ஆதரவு ஆகியவற்றை மதிப்பிடுவதற்கு சுயாதீனமான மூன்றாம் தரப்புத் தணிக்கை நடத்தப்பட வேண்டும் என்றும் அமைப்பு கோரியுள்ளது.

வெளியுறவு அமைச்சு அதிகாரிகளின் பணியையும் அர்ப்பணிப்பையும் மதிப்பதாகக் குறிப்பிட்ட MASFIH, அதேவேளையில் காணாமல் போனவர்களின் குடும்பத்தினரும் நீண்டகால மன உளைச்சலையும் பொருளாதாரச் சுமையையும் எதிர்கொண்டு வருவதால், அவர்களது உணர்வுகளுக்கும் உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்றது.

“காணாமல் போன ஒவ்வொரு பெயருக்குப் பின்னாலும் ஒரு குடும்பம் காத்திருக்கிறது. அவர்கள் வெறும் புள்ளிவிவரங்கள் அல்ல; அன்புக்குரியவர்கள். அவர்கள் கண்டுபிடிக்கப்படும் வரை குடும்பத்தினர் நம்பிக்கையுடன் காத்திருப்பார்கள்,” என MASFIH அமைப்பின் இணை நிறுவனர், ஒருங்கிணைப்பாளர் மற்றும் பேச்சாளர் டாக்டர் மணிவண்ணன் ரெத்தினம் தெரிவித்துள்ளார்.

காணாமல் போன கோமதி ரெத்தினத்தின் சகோதரரான அவர், குடும்பத்தினரின் கேள்விகளுக்கு உடனடியாக எழுத்துப்பூர்வ விளக்கம் அளிப்பதுடன், வெளியுறவு அமைச்சர் மற்றும் AGC உயர் அதிகாரிகள் பங்கேற்கும் சந்திப்பையும் ஏற்பாடு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Scroll to Top