தோஹா, 09 நவம்பர் 2026 : உலகளாவிய டிஜிட்டல் தொடர்புத் துறையின் எதிர்காலத்தைத் திட்டமிடும் சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியத்தின் (ITU) 2026ஆம் ஆண்டுக்கான முழுமையான பிரதிநிதிகள் மாநாடு (PP-26) இன்று தோஹாவில் தொடங்கியது. இம்மாநாட்டில் உலகம் முழுவதிலுமிருந்து தொலைத்தொடர்புத் துறைத் தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் அரசாங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டு, உலகளாவிய டிஜிட்டல் இணைப்பின் எதிர்காலம் குறித்து ஆலோசிக்கின்றனர்.
மலேசியத் தொடர்புத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஃபஹ்மி ஃபட்சில், மலேசியப் பிரதிநிதிகள் குழுவுக்குத் தலைமை தாங்குகிறார். தோஹா கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தில் நடைபெறும் மாநாட்டின் முதல் பொதுக்கூட்ட அமர்வில், உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு (மலேசிய நேரப்படி இரவு 7.30 மணி) மலேசியாவின் தேசியக் கொள்கை தொடர்பான உரையை ஃபஹ்மி ஃபட்சில் நிகழ்த்தவுள்ளார்.
டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சி, உலகளாவிய இணைய இணைப்பு மற்றும் தொலைத்தொடர்புத் துறையின் எதிர்காலக் கொள்கைகள் குறித்து உலக நாடுகள் ஒன்றிணைந்து விவாதிக்கும் முக்கியத் தளமாக இம்மாநாடு அமையும்.







