என் தமிழ்

ஆசியக் கோப்பை காற்பந்துப் போட்டி தகுதிச் சுற்று : பாலஸ்தீனத்திடம் 0-2 என்ற கோல் கணக்கில் மலேசியா தோல்வி

கோலாலம்பூர், 09 நவம்பர் 2026 : 2027ஆம் ஆண்டு 17 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பைக் காற்பந்துப் போட்டியின் தகுதிச் சுற்றில், மலேசியாவின் 16 வயதுக்குட்பட்டோர் அணி பாலஸ்தீனத்திடம் 0-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. கோலாலம்பூர் காற்பந்து விளையாட்டரங்கில் நடைபெற்ற இப்போட்டி, குழு E பிரிவில் மலேசிய அணிக்கு முதல் ஆட்டமாக அமைந்தது.

ஆட்டத்தின் 17ஆவது நிமிடத்தில் யசான் கலீஃபா, ப்ரீ கிக் வாய்ப்பைப் பயன்படுத்தி பாலஸ்தீன அணிக்கு முதல் கோலைப் பெற்றுத் தந்தார். இரண்டாம் பாதியின் 52ஆவது நிமிடத்தில் யூசுப் புஸ்தாமி மற்றொரு கோலை அடித்து பாலஸ்தீன அணியின் முன்னிலையை 2-0 என அதிகரித்தார்.

ஆட்டத்தின் இறுதிக்கட்டத்தில் மலேசிய அணிக்குப் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. எனினும், அஹ்மத் ஆய்டில் முக்ரிட்ஸ் அஹ்மத் ரிட்ஸால்மானின் உதையை பாலஸ்தீன கோல்காப்பாளர் தடுத்து நிறுத்தினார். தொடர்ந்து கிடைத்த வாய்ப்பில் முகமது ஃபஸ்ரியேல் அஷ்ரஃப் ஸெஃப்ரி பந்தை வலைக்குள் செலுத்தியபோதும், அது ஆஃப்சைட் காரணமாக நிராகரிக்கப்பட்டது.

மலேசிய அணியின் தலைமைப் பயிற்றுநர் முகமது ஷுகோர் அடான் கூறுகையில், கிடைத்த கோல் வாய்ப்புகளைப் பயன்படுத்தத் தவறியதே தோல்விக்குக் காரணம் என்றார். பாலஸ்தீன அணி தனக்குக் கிடைத்த இரண்டு வாய்ப்புகளையும் கோல்களாக மாற்றியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அடுத்த ஆட்டத்திற்கு முன்பாகப் போட்டியின் காணொளிகளை ஆய்வு செய்து, அணியின் குறைபாடுகளைச் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், அடுத்த சுற்றுக்குத் தகுதி பெறுவதற்கான வாய்ப்பு இன்னும் இருப்பதால், வீரர்கள் இந்தத் தோல்வியிலிருந்து மீண்டு அடுத்த போட்டியில் முழுக் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Scroll to Top