என் தமிழ்

தீபாவளியை முன்னிட்டு இந்தியச் சிறு தொழில் முனைவோருக்கு RM30 மில்லியன் சிறப்பு நிதி – அதிகபட்சம் RM30,000 பெறலாம் : KLSICCI அறிவிப்பு

கோலாலம்பூர், 04 நவம்பர் 2026 : மலேசியாவில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, இந்தியச் சமூகத்தைச் சேர்ந்த சிறு தொழில் முனைவோர், வியாபாரிகள் மற்றும் சிறு வணிகர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், RM30 மில்லியன் மதிப்பிலான சிறப்பு நிதித் திட்டத்தைத் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சின் (KUSKOP) கீழ் செயல்படும் தெக்குன் நேஷனல் (TEKUN Nasional) அறிமுகப்படுத்தியுள்ளது.

‘பெர்காட் தீபாவளி 2026’ எனப் பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தின் மூலம், தகுதியுடைய இந்தியத் தொழில் முனைவோர் அதிகபட்சமாக RM30,000 வரை நிதியுதவி பெறலாம். இந்நிதியைத் திருப்பிச் செலுத்துவதற்கு அதிகபட்சம் 12 மாதங்கள் கால அவகாசம் வழங்கப்படுகிறது.

குறிப்பாக, தீபாவளிப் பண்டிகைக் காலத்தில் வணிக நடவடிக்கைகளை விரிவுபடுத்தவும், வியாபாரத் தேவைகளுக்கான முதலீடுகளை மேற்கொள்ளவும் சிறு தொழில் முனைவோருக்கு உதவுவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இத்திட்டத்திற்கான விண்ணப்பங்கள் கடந்த அக்டோபர் 3ஆம் தேதி தொடங்கியுள்ள நிலையில், வரும் நவம்பர் 8ஆம் தேதியுடன் விண்ணப்பக் காலம் நிறைவடைகிறது.

மலேசியக் குடியுரிமை பெற்ற, இந்தியச் சமூகத்தைச் சேர்ந்த 18 முதல் 65 வயதுக்குட்பட்ட தொழில் முனைவோர், வியாபாரிகள் மற்றும் சிறு வணிகர்கள் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள்.

உணவு மற்றும் பானங்கள் விற்பனை, ஆடை வணிகம், தீபாவளிக் கொண்டாட்டங்களுக்குத் தேவையான உபகரணங்கள் மற்றும் பொருள்கள் விற்பனை உள்ளிட்ட பல்வேறு தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்களும் இந்நிதியுதவியைப் பெற விண்ணப்பிக்கலாம்.

இத்திட்டம் குறித்து மலேசிய இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறைச் சம்மேளனம் (KLSICCI) வெளியிட்டுள்ள அறிவிப்பில், தகுதியுடைய தனது உறுப்பினர்களும் ஆர்வமுள்ள இந்தியத் தொழில் முனைவோரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே இடம்பெற்றுள்ள லிங்கில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பக் காலம் நவம்பர் 8ஆம் தேதியுடன் நிறைவடைவதால், தகுதியுடைய தொழில் முனைவோர் காலதாமதமின்றி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பதிவு செய்ய : https://tekunonline.tekun.gov.my/login

Scroll to Top