கோலாலம்பூர், 04 நவம்பர் 2026 : மலேசியாவில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, 2026ஆம் ஆண்டுக்கான தீபாவளி அதிகபட்ச விலைக் கட்டுப்பாட்டுத் திட்டம் (SHMMP) இன்று, நவம்பர் 4ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 11 வகையான பொருட்களுக்கு அதிகபட்ச விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டின் கீழ் இடம்பெறும் பொருட்களின் முழுப் பட்டியல் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட விலை விவரங்களைப் பொதுமக்கள் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புப் படத்தின் மூலம் அறிந்துகொள்ளலாம்.
இதனிடையே, வணிகர்கள் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச விலையை விடக் கூடுதல் விலைக்கு பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். விலைக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பொருட்களுக்கு இளஞ்சிவப்பு நிற விலைக் குறிப்பு அட்டைகளைப் பொருத்த வேண்டும் என்றும், போதுமான பொருட்களின் இருப்பை உறுதிசெய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


மேலும், விற்பனையில் பயன்படுத்தப்படும் எடை மற்றும் அளவீட்டுக் கருவிகள் உரிய முறையில் சரிபார்க்கப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டவையாக இருக்க வேண்டும் என்றும் வணிகர்களுக்கு நினைவூட்டப்பட்டுள்ளது. தீபாவளிப் பண்டிகைக்கான பொருட்களை வாங்கும்போது பொதுமக்கள் தங்களது செலவுகளை முன்கூட்டியே திட்டமிட்டு, நிர்ணயிக்கப்பட்ட விலைகளைச் சரிபார்த்து வாங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
பண்டிகைக் காலத்தில் நுகர்வோர் நலனைப் பாதுகாப்பதுடன், அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுக்குள் வைத்திருக்கும் நோக்கில் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.









