நேபாளம், 28 செப்டம்பர் 2026 : நேபாளத்தின் மனாங் மாவட்டத்தில் உள்ள ஹிம்லுங் ஹிமால் சிகரத்தின் அடிவார முகாமில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கியவர்களில் 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் சுமார் 12 பேர் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
7,126 மீட்டர் உயரம் கொண்ட ஹிம்லுங் ஹிமால் சிகரத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. அப்போது அங்கு மலையேற்ற முகாமில் நேபாளத்தைச் சேர்ந்த மலையேற்ற வீரர்கள் மற்றும் உதவியாளர்கள் தங்கியிருந்தனர்.
வெளிநாட்டு மலையேற்ற வீரர்கள் வருவதற்கு முன்பாக முகாமைத் தயார்படுத்துவதற்கும், மலையேற்றத்துக்கான கயிறுகளை அமைப்பதற்கும் நேபாளத்தைச் சேர்ந்த குழுவினர் முன்கூட்டியே அனுப்பப்பட்டிருந்தனர். அவர்களில் குறைந்தது 8 பேர் மாயமாகியுள்ளதாக ஹிமாலயா ஹாலிடேஸ் ட்ரெக்கிங் நிறுவனத்தைச் சேர்ந்த பிபூதி சந்த் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக அந்தப் பகுதியில் கனமழை மற்றும் பனிப்பொழிவு காணப்பட்டதாக வானிலை முன்னறிவிப்புகள் தெரிவித்திருந்தன. மோசமான வானிலை காரணமாக மீட்புப் பணிகளும் பாதிக்கப்பட்டன. ஆரம்பத்தில் ஹெலிகாப்டர்களாலும் மீட்புக் குழுவினராலும் சம்பவ இடத்தை அடைய முடியவில்லை.
இதையடுத்து காத்மாண்டுவில் இருந்து அனுபவம் வாய்ந்த மலையேற்ற வீரர்களைக் கொண்ட மீட்புக் குழு ஹெலிகாப்டர் மூலம் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டது. கடுமையான பனிப்பொழிவு மற்றும் மோசமான வானிலை காரணமாக மீட்புப் பணிகள் திங்கட்கிழமையும் தொடரும் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.







