கோலாலம்பூர், 10 நவம்பர் 2026 : நேபாளம்–திபெத் பகுதியில் கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி ஏற்பட்ட பெருவெள்ளத்தில் காணாமல் போன 54 மலேசியர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, அவர்களது குறைகளையும் கோரிக்கைகளையும் கேட்டறிந்த கெடா இளவரசி, துங்கு ராஜா புவான் மூடா, மலேசிய ஒற்றுமைக் குடும்பங்கள் நம்பிக்கையுடன் (MASFIH) அமைப்பின் பிரதிநிதிகளைச் சந்தித்தார்.
பேரிடர் நிகழ்ந்து 77 நாட்கள் கடந்துள்ள நிலையில், காணாமல் போனவர்களின் குடும்பத்தினர் எதிர்கொள்ளும் சிரமங்கள், தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகள் குறித்து நேரடியாகக் கேட்டறிய அவர் வாய்ப்பளித்ததாக MASFIH வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்தச் சந்திப்பின்போது, காணாமல் போன 54 மலேசியர்களில் 42 பேர் கைலாஷ் மலைக்கான ஆன்மிகப் பயணத்தில் பங்கேற்றவர்கள் என்றும், எஞ்சிய 12 பேர் மலையேற்ற நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் என்றும் விளக்கமளிக்கப்பட்டது.



மேலும், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளின் நிலவரம், உடல்களை மீட்கும் நடவடிக்கைகள், குடும்பங்களின் நலத்தேவைகள், நிதியுதவி, சட்ட மற்றும் ஆவண நடைமுறைச் சிக்கல்கள், கடன் திருப்பிச் செலுத்துதல் தொடர்பான நிதிப் பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டன. நேபாளம் மற்றும் திபெத்தில் தொடர்புடைய இடங்களுக்கு மனிதாபிமானப் பயணம் மேற்கொள்வதற்கான முன்மொழிவும் இச்சந்திப்பில் முன்வைக்கப்பட்டது.
குடும்பத்தினரின் துயரங்களைக் கேட்டறிந்து அவர்களுக்கு ஆதரவளித்த கெடா இளவரசியின் செயல் மிகுந்த ஆறுதலையும் மனவலிமையையும் அளித்துள்ளதாக MASFIH நன்றியுடன் குறிப்பிட்டுள்ளது. இதுபோன்ற அக்கறையும் ஆதரவும் மற்ற மாநில அரச குடும்பங்கள், மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள், நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களிடமும் உருவாக வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.
இதற்கிடையே, காணாமல் போன 54 மலேசியர்களும் தொடர்ந்து காணாமல் போனவர்களாகவே வகைப்படுத்தப்பட்டுள்ளதாக MASFIH மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒருமுறை வழங்கப்படும் ரி.ம.10,000 சிறப்பு நிதியுதவி அங்கீகரிக்கப்பட்டுள்ள போதிலும், காணாமல் போனவர்களின் நிலை, சட்ட விளைவுகள், ஆவணங்கள், சொத்து நிர்வாகம் மற்றும் நிதிப் பொறுப்புகள் தொடர்பான பல கேள்விகளுக்கு இன்னும் தீர்வு காணப்பட வேண்டியுள்ளது எனத் தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் இன அல்லது மதம் சார்ந்த பிரச்சினையல்ல; பல்வேறு பின்னணிகளைக் கொண்ட மலேசியர்களை உள்ளடக்கிய மனிதாபிமானப் பிரச்சினை எனக் குறிப்பிட்ட MASFIH, பாதிக்கப்பட்ட குடும்பங்களின் குரலைத் தொடர்ந்து உரிய தரப்புகளிடம் எடுத்துச் செல்லப்போவதாகவும் தெரிவித்துள்ளது.
அன்புக்குரியவர்கள் குறித்த உறுதியான தகவல் கிடைக்கும் வரை குடும்பத்தினரின் நம்பிக்கை தொடர்ந்து நிலைத்திருக்கும் என்றும் அமைப்பு தெரிவித்துள்ளது.
புகைப்படம் : Kedah Royal Family







