கோலாலம்பூர், 23 செப்டம்பர் 2026 : நேபாளத்தில் ஆகஸ்ட் 26ஆம் தேதி ஏற்பட்ட பேரிடரைத் தொடர்ந்து 55 மலேசியர்கள் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் உள்ளதால், அவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை நேரில் சந்திக்க வாய்ப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Malaysia Solidarity: Families in Hope (MASFIH) சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், நேபாள பிரதமர் பலேந்திர ஷாவுடன் பிரதமர் அன்வார் இப்ராஹிம் நேரடியாக பேசியதை குடும்பத்தினர் வரவேற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது காணாமல் போனவர்களின் நிலை குறித்து உயர்மட்டத்தில் கவனம் செலுத்தப்படுவதற்கான முக்கிய நடவடிக்கையாகும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
பேரிடர் நிகழ்ந்து 28 நாட்கள் கடந்துள்ள நிலையில், 55 குடும்பங்கள் தங்களது அன்புக்குரியவர்களின் நிலை குறித்த உறுதியான தகவலுக்காக தொடர்ந்து காத்திருப்பதாக MASFIH தெரிவித்துள்ளது.
அனைத்து 55 குடும்பங்களும் ஒரே நேரத்தில் பிரதமரை சந்திப்பது சாத்தியமில்லையெனில், பாதிக்கப்பட்ட குடும்பங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் காணாமல் போனவர்களின் நெருங்கிய உறவினர்கள் அடங்கிய சிறிய குழுவையாவது பிரதமர் சந்திக்க வேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
குடும்பங்களின் கவலைகள், இதுவரை கிடைத்த தகவல்கள் மற்றும் இன்னும் தெளிவுபடுத்தப்பட வேண்டிய விடயங்களை பிரதமரிடம் நேரடியாக எடுத்துரைக்க விரும்புவதாகவும், மலேசிய அரசு தொடர்ந்து மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகள் குறித்து பிரதமரிடமிருந்து நேரடியாக அறிந்துகொள்ள விரும்புவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
நேபாளத்தில் தேடுதல் மற்றும் நிலைமையை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், SMART குழுவின் களப்பணி நிறைவடைந்தாலும் 55 மலேசியர்களின் நிலையை உறுதிப்படுத்தும் முயற்சிகள் முடிவடையவில்லை என்றும் மலேசிய வெளியுறவு அமைச்சகம் முன்னதாக தெரிவித்திருந்தது.
மேலும், நேபாளத்துடன் மட்டுமின்றி சீன அதிகாரிகளுடனான தூதரகத் தொடர்புகளையும் தொடர்ந்து வலுப்படுத்த வேண்டும் என குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளனர். “நாங்கள் ஊகங்களை கேட்கவில்லை; பதில்களையே கேட்கிறோம்” என்ற நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள குடும்பத்தினர், ஒவ்வொரு நியாயமான வழியிலும் தேடுதல் மற்றும் தகவல் திரட்டும் நடவடிக்கைகள் தொடர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளனர்.







