கோலாலம்பூர், 07 நவம்பர் 2026 : உலகச் சந்தையில் நிலவும் நிச்சயமற்ற சூழல் காரணமாக முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட்டதால், அமெரிக்க டாலருக்கு நிகரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு வெள்ளிக்கிழமை சரிவுடன் முடிவடைந்தது. மாலை 6 மணியளவில், அமெரிக்க டாலருக்கு எதிரான ரிங்கிட்டின் மதிப்பு 4.0565/4.0610 ஆகப் பதிவானது. வியாழக்கிழமை வர்த்தக முடிவில் இது 4.0445/4.0490 ஆக இருந்தது.
உலகச் சந்தையில் முதலீட்டாளர்கள் ஆபத்தான முதலீடுகளைத் தவிர்த்து பாதுகாப்பான முதலீடுகளை நாடி வருவதும், குறைக்கடத்தித் துறையில் பங்குகள் விற்பனை அதிகரித்திருப்பதும் ரிங்கிட்டின் மதிப்பில் அழுத்தத்தை ஏற்படுத்தியதாகப் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்தனர்.
SPI Asset Management நிறுவனத்தின் நிர்வாகப் பங்குதாரர் ஸ்டீபன் இன்னஸ் கூறுகையில், உலகச் சந்தையில் நிலவும் நிச்சயமற்ற தன்மையால் முதலீட்டாளர்கள் அமெரிக்க டாலரைப் பாதுகாப்பான முதலீடாகக் கருதி அதிகம் நாடுவதாகத் தெரிவித்தார்.
இதற்கிடையில், செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் முதலீடுகள் குறித்த கவலைகளும் நிதிச் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாக பேங்க் முஆமலாட் மலேசியாவின் தலைமைப் பொருளாதார நிபுணர் டாக்டர் முகமது அஃப்ஸானிசாம் அப்துல் ரஷித் குறிப்பிட்டார்.
அமெரிக்காவின் அக்டோபர் மாத வேலைவாய்ப்புத் தரவுகள் வெளியாகவுள்ளதால், முதலீட்டாளர்கள் அதையும் எதிர்பார்த்துக் காத்திருப்பதாக அவர் கூறினார். மற்ற முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட் கலவையான நிலையைப் பதிவு செய்தது. ஜப்பானிய யெனுக்கு எதிராக அதன் மதிப்பு குறைந்த நிலையில், யூரோ மற்றும் பிரிட்டிஷ் பவுண்டுக்கு எதிராக உயர்ந்தது.
ஆசியான் நாடுகளின் நாணயங்களுக்கு எதிராகவும் ரிங்கிட் கலவையான போக்கைக் காட்டியது. சிங்கப்பூர் டாலர் மற்றும் தாய் பாட் ஆகியவற்றுக்கு எதிராக உயர்ந்த ரிங்கிட், இந்தோனேசிய ரூபியா மற்றும் பிலிப்பைன்ஸ் பெசோவுக்கு எதிராகச் சரிவைக் கண்டது.







