கோலாலம்பூர், 23 செப்டம்பர் 2026 : மலேசிய தமிழர் கலைமன்றத்தின் முன்னாள் தலைவரும், தமிழ் மேடை நாடகத்துறையின் முன்னணி கலைஞருமான மறைந்த நடிகமணி எம்.எஸ். மணியத்தின் கலைச்சேவைகளை நினைவுகூரும் வகையில், ‘நம் நினைவில் நடிகமணி எம்.எஸ். மணியம்’ என்ற சிறப்பு நினைவு ஒன்றுகூடல் நடைபெறவுள்ளது.
செப்டம்பர் 27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 12.30 மணி வரை டான்ஶ்ரீ கே.ஆர். சோமா அரங்கில் இந்நிகழ்ச்சி நடைபெறும். மலேசிய தமிழர் கலைமன்றத்தின் தற்போதைய தலைவர் ஜேம்ஸ் காளிமுத்து நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்குகிறார்.
பல ஆண்டுகளாக தமிழ் மேடை நாடகத்துறையில் நடிகமணி எம்.எஸ். மணியம் ஆற்றிய கலைப்பணிகள் மற்றும் சேவைகளை நினைவுகூரும் வகையில் இந்த ஒன்றுகூடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கலைத்துறையைச் சேர்ந்த கலைஞர்கள், மாணவர்கள், சக நடிகர்கள், நாடக ஆர்வலர்கள் மற்றும் நண்பர்கள் திரளாக கலந்து கொண்டு, மறைந்த நடிகமணி எம்.எஸ். மணியத்திற்கு புகழஞ்சலி செலுத்துமாறு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி. மணிவாசகம் அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும், எம்.எஸ். மணியத்தின் குடும்பத்தினரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவரது கலைப்பணிகளை நினைவுகூருமாறு அனைவரையும் கேட்டுக்கொண்டுள்ளனர். நிகழ்ச்சியில் காலை உணவும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.







