தமிழ்நாடு [புதுக்கோட்டை], 21 செப்டம்பர் 2026 : புதுக்கோட்டை கம்பன் கழகத்தின் ஏற்பாட்டில் 51-வது ஆண்டாக நடைபெறும் கம்பன் பெருவிழாவில் தலைமையுரையாற்றி, விருதுகள் வழங்கி கவுரவித்ததில் மகிழ்ச்சி அடைவதாக தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் மஇகா தேசியத் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் எம். சரவணன் தெரிவித்துள்ளார்.
விழாவில் நடைபெற்ற ‘பாராட்டு அரங்கம்’ நிகழ்ச்சியில் தமிழுக்குத் தொண்டாற்றியவர்களுக்கு பாராட்டும் அங்கீகாரமும் வழங்கப்பட்டது சிறப்புக்குரியது என அவர் குறிப்பிட்டார்.
கம்பனின் சிறப்பையும் கம்பராமாயணத்தின் பெருமையையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் இருப்பதாகக் கூறிய சரவணன், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பின்னரும் தொடர்ந்து பேசப்படும் கம்பராமாயணம் உள்ளிட்ட தமிழ் இலக்கியங்களும் இதிகாசங்களும் நமது வாழ்வியல் வழிமுறைகளாகத் திகழ்வதாக தெரிவித்தார்.


இந்த இலக்கியச் செல்வங்களைத் தொலைத்துவிடாமல், அவற்றை எதிர்கால தலைமுறைக்கு பொக்கிஷமாக வழங்குவதற்கான வழிமுறைகள் குறித்து ஆராய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள கம்பன் கழகங்கள் இதுபோன்ற நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி வருவதும், அவற்றுக்கு பல்வேறு அமைப்புகளும் பொதுமக்களும் ஆதரவு அளித்து வருவதும் பாராட்டுக்குரியது என்றும் டத்தோஸ்ரீ எம். சரவணன் தெரிவித்தார்.
புதுக்கோட்டை கம்பன் கழகத்தின் 51-வது ஆண்டு கம்பன் பெருவிழா செப்டம்பர் 18ஆம் தேதி தொடங்கியதாகவும், 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் தமிழ் இலக்கியம், கம்பராமாயணம், ஆன்மிகம், கலை மற்றும் பண்பாடு சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெறுவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.







