என் தமிழ்

மலாக்காவில் 21 தமிழ்ப்பள்ளிகளின் கல்வி மேம்பாட்டிற்கு மித்ரா மூலம் RM755,390 நிதி ஒதுக்கீடு – ரமணன்

மலாக்கா, 05 நவம்பர் 2026 : மலாக்கா மாநிலத்தில் உள்ள 21 தமிழ்ப்பள்ளிகளின் கற்பித்தல் மற்றும் கற்றல் வசதிகளை மேம்படுத்துவதற்காக, மலேசிய இந்தியச் சமூக உருமாற்றப் பிரிவான மித்ரா இவ்வாண்டு மொத்தம் RM755,390 நிதியை ஒதுக்கியுள்ளது.

இந்த நிதி மூலம் மடானி தளவாட உதவிகள், மாணவர்களுக்கான கூடுதல் பயிற்சி வகுப்புகள், ஸ்மார்ட் போர்டு உள்ளிட்ட டிஜிட்டல் கற்றல் உபகரணங்கள் வழங்குதல் போன்ற பல்வேறு கல்வி மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாக மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

கல்வி அமைச்சு, பள்ளி நிர்வாகங்கள் மற்றும் பள்ளி வாரியங்களுடன் இணைந்து இத்திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாகவும், மாணவர்களின் கல்வித் தேவைகளுக்கு ஏற்ற உதவிகளை வழங்குவதே இதன் நோக்கம் என்றும் அவர் கூறினார். இன்று ஆயர் மெர்பாவ் பகுதியில் அமைந்துள்ள ஜாசின் லாலாங் தமிழ்ப்பள்ளிக்கு வருகை தந்தபோது அவர் இதனைத் தெரிவித்தார். அப்பள்ளிக்கு மித்ரா திட்டத்தின் கீழ் RM47,560 நிதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், பாலர் கல்வி முதல் அரசுப் பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் உயர்கல்வி நிறுவனங்கள் வரை பயிலும் இந்திய மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் வகையில் பல்வேறு உதவித் திட்டங்களை மித்ரா இவ்வாண்டு அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஒவ்வொரு கல்வி நிலையத்திலும் பயிலும் மாணவர்களின் தேவைகளுக்கு ஏற்ப இலக்கிடப்பட்ட உதவிகள் வழங்கப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், தமிழ்ப்பள்ளிகளில் தொழில்நுட்ப வசதிகளையும் டிஜிட்டல் கற்றல் முறைகளையும் விரிவுபடுத்துவதற்கும் மித்ரா தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வருவதாகத் தெரிவித்தார்.

Scroll to Top