பெட்டாலிங் ஜெயா, 19 செப்டம்பர் 2026 : வேலைவாய்ப்பு காப்புறுதி முறை (SIP) பங்களிப்பாளர்களுக்கான பலன்கள் மற்றும் பாதுகாப்பு அக்டோபர் 1 முதல் மேம்படுத்தப்பட உள்ளதாக மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன் தெரிவித்துள்ளார். திருத்தப்பட்ட சட்டத்தின் கீழ், தகுதி மற்றும் பெறப்படும் பலன்களைப் பொறுத்து ஒருவருக்கு மொத்தமாக RM25,000 வரை ஆதரவு மற்றும் பாதுகாப்பு கிடைக்கலாம்.
வேலை இழந்த பங்களிப்பாளர்கள் புதிய வேலைவாய்ப்பைப் பெறவும், தங்களது திறன்களை மேம்படுத்தவும், புதிய பணிக்காக இடம்பெயர்வதற்கான செலவுகளைச் சமாளிக்கவும் இந்த மேம்பாடுகள் உதவும் என ரமணன் தெரிவித்தார். ஆரம்பகால மறுவேலைக்கான கொடுப்பனவு (EBSA), இதுவரை செலுத்தப்படாமல் இருக்கும் வேலை தேடல் கொடுப்பனவின் 25 சதவீதமாக இருந்த நிலையில், இனி 50 சதவீதமாக அதிகரிக்கப்படுகிறது.
அதேபோல், புதிய வேலைவாய்ப்பைப் பெற்று 100 கிலோமீட்டருக்கும் அதிகமான தொலைவுக்கு குடியிருப்பிலிருந்து இடம்பெயர வேண்டிய பங்களிப்பாளர்களுக்கு ஒருமுறை RM1,000 இயக்கக் கொடுப்பனவு அறிமுகப்படுத்தப்படுகிறது. பயிற்சிக் கொடுப்பனவும் நாளொன்றுக்கு RM10-இலிருந்து RM30-ஆக உயர்த்தப்படுவதுடன், பயிற்சிக்கான அதிகபட்ச கட்டணம் RM4,000-இலிருந்து RM7,000-ஆக அதிகரிக்கப்படுகிறது.
பெட்டாலிங் ஜெயாவில் நடைபெற்ற Mega Festival iLINDUNGu PERKESO நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரமணன், தற்போது 87 சதவீத தொழிலாளர்கள் SIP-ல் பங்களித்து வருவதாகவும், மீதமுள்ள 13 சதவீதத்தினரும் இந்தத் திட்டத்தின் மூலம் தங்களையும் குடும்பத்தினரையும் பாதுகாத்துக்கொள்ள முன்வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
வேலை இழந்தவர்களுக்கு வேலை தேடல் கொடுப்பனவு, வேலைவாய்ப்பு ஏற்பாடு மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை SIP வழங்குகிறது.
இதனிடையே, மூன்று நாட்கள் நடைபெறும் Mega Festival iLINDUNGu நிகழ்ச்சியில் 25 நிறுவனங்கள் பங்கேற்று சுமார் 2,000 வேலைவாய்ப்புகளை வழங்குகின்றன. இப்பணிகளுக்கான மாத சம்பளம் RM2,000 முதல் RM12,000 வரை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.







