செகாமாட், 01 செப்டம்பர் 2026 : செகாமாட்டில் உள்ள SMK Canossian Convent பள்ளியின் 70ஆம் ஆண்டு நிறைவு விழா சிறப்பாக நடைபெற்றது. பள்ளியின் Canossa Hall-ல் நடைபெற்ற இந்த விழாவில் பல தலைமுறைகளைச் சேர்ந்த முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பள்ளி சமூகத்தினர் ஒன்றுகூடி சிறப்பித்தனர். விழாவில் தேசிய ஒற்றுமை துணை அமைச்சர் யுனேஸ்வரன் ராமராஜ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு 70ஆம் ஆண்டு நிறைவு இரவு விருந்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார்.
1968ஆம் ஆண்டு முதல் சமீபத்திய தலைமுறை வரையிலான முன்னாள் மாணவர்கள் ஒரே இடத்தில் ஒன்றுகூடியது விழாவின் முக்கிய சிறப்பம்சமாக அமைந்தது. பள்ளி தங்களுக்கு வழங்கிய கல்வி மற்றும் அனுபவங்களை நினைவுகூர்ந்த முன்னாள் மாணவர்கள், தங்களது பழைய நண்பர்கள் மற்றும் ஆசிரியர்களைச் சந்தித்து மகிழ்ந்தனர்.
பல்வேறு இனங்களைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து வழங்கிய கலை நிகழ்ச்சிகளும் விழாவை மேலும் சிறப்பித்தன. இந்நிகழ்வுகள் மலேசியாவின் பன்முகத்தன்மையையும், பல்வேறு சமூகங்களுக்கிடையிலான ஒற்றுமையையும் வெளிப்படுத்தின.
சுதந்திர தினத்திற்கு முந்தைய நாளில் நடைபெற்ற இவ்விழாவில் உரையாற்றிய யுனேஸ்வரன் ராமராஜ், பள்ளி என்பது கல்வியை வழங்கும் இடமாக மட்டுமல்லாமல், வேறுபாடுகளை மதிக்கவும், நட்பை வளர்க்கவும், மலேசியர்களாக ஒன்றிணைந்து வாழவும் கற்றுத்தரும் தளமாகவும் விளங்குவதாகக் குறிப்பிட்டார்.
மேலும், SMK Canossian Convent பள்ளியின் கல்வி மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்கும், முன்னாள் மாணவர் சங்கத்தின் நடவடிக்கைகளுக்கும் ஆதரவாக நன்கொடைகளையும் அவர் அறிவித்தார்.
70 ஆண்டுகளாக மாணவர்களுக்கு கல்வியையும் வாழ்க்கை அனுபவங்களையும் வழங்கி வரும் SMK Canossian Convent, தொடர்ந்து அறிவு, நட்பு மற்றும் ஒற்றுமையை வளர்க்கும் கல்வி நிலையமாக திகழ வேண்டும் என யுனேஸ்வரன் ராமராஜ் வாழ்த்துத் தெரிவித்தார். விழாவில் செகாமாட் மாவட்ட கல்வி அலுவலர் ஹாஜி அப்துல் ரஹ்மான் ஹாஜி கெச்சிக், SMKCC குழுத் தலைவர் லிம் லில்லி, பள்ளி முதல்வர் சுசானாரியா இப்ராஹிம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.







