01 செப்டம்பர் 2026 : புக்கிட் காசிங் MIC கிளையும் Rotary Club of Bukit Jalil Kuala Lumpur-வும் இணைந்து பொதுமக்களுக்காக ‘Merdeka Health Camp 2026’ என்ற இலவச சமூக சுகாதார முகாமை ஏற்பாடு செய்துள்ளன. இம்முகாம் வரும் செப்டம்பர் 6ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை Pearl Point Shopping Mall-ன் 2ஆம் தளத்தில் நடைபெறவுள்ளது.
முகாமில் பொதுமக்களுக்கு இலவச BMI பரிசோதனை, பொது உடல்நலப் பரிசோதனை, இரத்தச் சர்க்கரை பரிசோதனை மற்றும் கண் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு சுகாதார சேவைகள் வழங்கப்பட உள்ளன. மேலும், உணவு மற்றும் ஊட்டச்சத்து ஆலோசனைகள், உடல்நலக் கல்வி மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை தொடர்பான ஆலோசனைகளும் வழங்கப்படும்.
இதனுடன், குழந்தைகளுக்கான ஓவியப் போட்டியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், குடும்பத்துடன் கலந்து கொண்டு பயனுள்ள சுகாதாரத் தகவல்களைப் பெறுவதற்கான வாய்ப்பாக இந்த முகாம் அமையவுள்ளது. சுகாதார விழிப்புணர்வு உரைகளும் இடம்பெறவுள்ளதுடன், St. John’s Ambulance Southern Zone சார்பில் முறையான CPR மற்றும் AED சாதனப் பயன்பாடு தொடர்பான பயிற்சியும் வழங்கப்படவுள்ளது.
முகாமில் பங்கேற்க எந்தக் கட்டணமும் இல்லை. பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங்களது உடல்நிலையை பரிசோதித்துக் கொண்டு, சுகாதாரமான வாழ்க்கை முறையைப் பேணுவதற்கான பயனுள்ள ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
‘Sihat Bersama, Malaysia MADANI’ என்ற நோக்கத்துடன் நடைபெறும் இம்முகாம், சுதந்திர மாதக் கொண்டாட்டத்துடன் ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கும் முயற்சியாகவும் அமைகிறது.








