கோலாலம்பூர், 15 ஆகஸ்ட் 2026 : உலகப் பொருளாதாரம் மந்தநிலையை எதிர்கொண்டு வரும் நிலையில், மலேசியாவின் பொருளாதாரம் 2026ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் 6 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
இந்த வளர்ச்சி சந்தை எதிர்பார்ப்புகளைத் தாண்டியதுடன், கொரோனா பெருந்தொற்று காலத்தைத் தவிர்த்து 2014ஆம் ஆண்டுக்குப் பின்னர் பதிவான இரண்டாவது காலாண்டின் வலுவான பொருளாதார வளர்ச்சியாக அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். உலகளாவிய விநியோகச் சங்கிலி நெருக்கடி மற்றும் மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக உலகப் பொருளாதார வளர்ச்சி மந்தமடைந்து வரும் சூழலிலும் மலேசியா இந்த வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
மக்கள் மீது உலகளாவிய பணவீக்கத்தின் தாக்கம் அதிகமாக ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய MADANI அரசாங்கம் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் பொருளாதாரத்தின் வலிமைக்கு பங்களித்துள்ளதாக அன்வார் தெரிவித்தார்.
குறிப்பாக BUDI MADANI, Sumbangan Tunai Rahmah (STR), Sumbangan Asas Rahmah (SARA) உள்ளிட்ட உதவித் திட்டங்களுடன், அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்தவும், போதுமான விநியோகத்தை உறுதி செய்யவும் அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார்.
2026ஆம் ஆண்டின் முதல் பாதியில் மலேசியாவின் பொருளாதாரம் 5.7 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதையும் அன்வார் சுட்டிக்காட்டினார். தொடர்ந்து மூன்று காலாண்டுகளாக பொருளாதாரம் எதிர்பார்ப்புகளைத் தாண்டிய செயல்திறனைப் பதிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எனினும், பொருளாதார வளர்ச்சியின் வேகம் தொடர்ந்து நிலைத்திருப்பதை உறுதி செய்வதுடன், நாட்டின் செல்வமும் வளர்ச்சியின் பலன்களும் அனைத்து மக்களையும் சென்றடைவதை உறுதி செய்ய இன்னும் பல பணிகளை MADANI அரசாங்கம் மேற்கொள்ள வேண்டியுள்ளது என பிரதமர் குறிப்பிட்டார்.
குறிப்பாக மக்களுக்கு சிறந்த வருமானம், தரமான வேலைவாய்ப்புகள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கான தொடர்ச்சியான ஆதரவு ஆகியவற்றை உறுதி செய்வதில் அரசாங்கம் கவனம் செலுத்தும் என்றும் அன்வார் தெரிவித்தார். மலேசியாவின் பொருளாதார அடித்தளத்தை மேலும் வலுப்படுத்தி, மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கில் சீர்திருத்தப் பாதையில் MADANI அரசாங்கம் தொடர்ந்து பயணிக்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.






