என் தமிழ்

80-வது சுதந்திர தினம் : கோட்டை கொத்தளத்தில் முதல் முறையாக தேசியக் கொடியேற்றினார் முதலமைச்சர் விஜய்

சென்னை, 15 ஆகஸ்ட் 2026 : தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் தனது முதல் சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் விஜய் இன்று சென்னை ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். நாடு முழுவதும் 80-வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழக அரசு சார்பில் சென்னை தலைமைச் செயலகத்தில் சுதந்திர தின விழா நடைபெற்றது. இதையொட்டி காலை சுமார் 8 மணியளவில் தனது இல்லத்தில் இருந்து புறப்பட்ட முதலமைச்சர் விஜய், மெரினா கடற்கரை வழியாக காவல்துறை பாதுகாப்புடன் கோட்டைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

காலை சுமார் 8.35 மணியளவில் கோட்டை முன்பாக நடைபெற்ற காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் விஜய் ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து திறந்த ஜீப்பில் சென்று காவல்துறையினரின் அணிவகுப்பை பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து கோட்டை கொத்தளத்திற்கு சென்ற முதலமைச்சர் விஜய், காலை 8.45 மணியளவில் கொடிக்கம்பத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் சுதந்திர தின உரையை நிகழ்த்தினார்.

தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு விஜய் பங்கேற்ற முதல் சுதந்திர தின விழா என்பதால், இந்த நிகழ்வு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Scroll to Top