புதுடெல்லி, 12 ஆகஸ்ட் 2026 : ‘வந்தே மாதரம்’ தேசியப் பாடலுக்கு தேசிய கீதத்துக்கு இணையான சட்டப் பாதுகாப்பு வழங்கும் மசோதாவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதா தற்போது சட்டமாகியுள்ளது.
‘தேசிய கவுரவச் சின்னங்கள் அவமதிப்பு தடுப்பு திருத்த மசோதா’ கடந்த ஜூலை 29ஆம் தேதி மாநிலங்களவையிலும், ஜூலை 30ஆம் தேதி மக்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. பின்னர் ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், தற்போது அதற்கு ஒப்புதல் கிடைத்துள்ளது.
புதிய சட்டத்தின்படி, ‘வந்தே மாதரம்’ பாடலை உள்நோக்கத்துடன் பாடுவதைத் தடுப்பது அல்லது பொது நிகழ்ச்சியில் பாடும்போது இடையூறு ஏற்படுத்துவது குற்றமாக கருதப்படும். இதற்கு 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படலாம்.
இதனிடையே, வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றும் நிகழ்வில் ‘வந்தே மாதரம்’ பாடல் பாடப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்கனவே தெரிவித்துள்ளது. மேலும், தேசிய கீதமும் தேசியப் பாடலும் இடம்பெறும் அரசு நிகழ்ச்சிகளில் முதலில் ‘வந்தே மாதரம்’ பாடலின் ஆறு சரணங்களும் பாடப்பட வேண்டும் அல்லது இசைக்கப்பட வேண்டும் என்றும், பாடல் இசைக்கப்படும் போது அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என்றும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் முந்தைய உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.






