சீனா, 12 ஆகஸ்ட் 2026 : சீனாவின் ஹைனான் மாகாணத்தில் உள்ள வென்சாங் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்ட ‘லாங் மார்ச் 7A’ ராக்கெட், விண்ணில் பாய்ந்த 85 வினாடிகளில் வெடித்துச் சிதறியது. சீனாவின் விண்வெளி ஆய்வு நிறுவனம் உருவாக்கிய சோங்ஜிங்-4பி தகவல் தொடர்பு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவதற்காக இந்த ராக்கெட் ஏவப்பட்டது. இந்த செயற்கைக்கோள் ராணுவம் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வடிவமைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராக்கெட் ஏவப்பட்ட 85 வினாடிகளில் ஏற்பட்ட வெடிப்பில், ராக்கெட்டும் அதனுள் கொண்டு செல்லப்பட்ட செயற்கைக்கோளும் முற்றிலும் அழிந்தன. ராக்கெட்டின் உந்துவிசைப் பகுதி வழக்கமாகப் பிரிய வேண்டிய கட்டத்தை அடைவதற்கு முன்பே இந்த சம்பவம் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சோங்ஜிங்-4பி செயற்கைக்கோளை அதன் திட்டமிட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தும் முயற்சி தோல்வியடைந்தது. இந்த சம்பவம் ‘லாங் மார்ச் 7A’ ராக்கெட்டின் 2020ஆம் ஆண்டு அறிமுகத்துக்குப் பிறகு ஏற்பட்ட இரண்டாவது தோல்வியாகும்.
ராக்கெட் வெடித்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. சீன விண்வெளித் திட்டத்திற்கு இது பின்னடைவாக அமைந்தாலும், நாட்டின் ஒட்டுமொத்த விண்வெளி நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.






