12 ஆகஸ்ட் 2026 : பூச்சி இரவி இயக்கிய “உறவுகள்” மேடை நாடகம் இன்று சோமா அரங்கத்தில் அரங்கேறியது. இதில் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் ம.இ.கா தேசியத் துணைத் தலைவருமான டத்தோ ஸ்ரீ டாக்டர் எம். சரவணன் கலந்து கொண்டு நாடகத்தைப் பார்வையிட்டார். ஒவ்வொரு குடும்பத்திலும் உறவுகளுக்கிடையே ஏற்படும் இணக்கங்களையும் பிணக்கங்களையும் தத்ரூபமாக வெளிப்படுத்திய இந்த நாடகம், பார்வையாளர்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது.
கணவன்–மனைவிக்கிடையே ஏற்படும் பிரச்சினைகள், அவை விவாகரத்து வரை செல்வதால் அதிகரிக்கும் விவாகரத்து வழக்குகள் மற்றும் இதனால் பாதிக்கப்படும் குழந்தைகள் ஆகிய குடும்பச் சூழல்களை நாடகம் உணர்வுபூர்வமாக எடுத்துக்காட்டியது. மேலும், சடங்குகள், சம்பிரதாயங்கள் மற்றும் கலாச்சாரத்தின் முக்கியத்துவத்தையும் நாடகத்தின் மூலம் இயக்குநர் பூச்சி இரவி எடுத்துரைத்திருந்தார்.
நாடகத்தைப் பார்வையிட்ட பின்னர் பேசிய டத்தோ ஸ்ரீ டாக்டர் எம். சரவணன், குடும்ப வாழ்க்கையில் அன்பும் அறமும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை வலியுறுத்தினார். இதுகுறித்து திருவள்ளுவரின், “அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது” என்ற குறளை அவர் மேற்கோள் காட்டினார். குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தையும், அவற்றைப் பேணுவதன் அவசியத்தையும் சமூகத்திற்கு எடுத்துரைக்கும் வகையில் “உறவுகள்” நாடகம் அமைந்துள்ளதாக அவர் பாராட்டினார்.






