என் தமிழ்

இந்திய சமூகத்தின் பொருளாதார முன்னேற்றத்திற்கு RM6.7 மில்லியன் ஒதுக்கீடு : மித்ரா மூலம் 3 புதிய திட்டங்கள்

11 ஆகஸ்ட் 2026 : இந்திய சமூகத்தின் சமூகப் பொருளாதார நிலையை வலுப்படுத்தும் வகையில், மடானி அரசாங்கத்தின் சார்பில் மித்ரா மூலம் மூன்று புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இத்திட்டங்களுக்கு மொத்தம் RM6.7 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

Tuisyen MADANI திட்டத்தின் கீழ், SPM மற்றும் STPM தேர்வுகளை எதிர்கொள்ளவுள்ள 2,343 இந்திய மாணவர்களுக்கு இலவச கூடுதல் வகுப்புகளை வழங்க RM2.63 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. நிதி நெருக்கடி காரணமாக மாணவர்கள் கல்வி வழிகாட்டுதலைப் பெறுவதில் தடைகள் ஏற்படக்கூடாது என்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

இந்திய சமூகத்தின் பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில், Uyarvu MADANI திட்டத்திற்காக RM25 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. B40 மற்றும் M40 பிரிவுகளைச் சேர்ந்த 700 தொழில்முனைவோர் இத்திட்டத்தின் மூலம் பயனடைய உள்ளனர்.

இதன் முதல் கட்டத்தில் 128 தொழில்முனைவோருக்கு மொத்தம் RM3.05 மில்லியன் மதிப்பிலான நிதியுதவி வழங்கப்பட்டது. பிரிவைப் பொறுத்து அதிகபட்சமாக RM50,000 வரை உதவி வழங்கப்படுகிறது. முதல் கட்டத்தில் நிதியுதவி பெற்றவர்களில் 55 சதவீதம் பேர் பெண்கள் தொழில்முனைவோர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, Dharma MADANI திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள 676 இந்து வழிபாட்டுத் தலங்களுக்கு இதுவரை மொத்தம் RM13.52 மில்லியன் நிதியுதவி அங்கீகரிக்கப்பட்டுள்ளது. நான்காவது கட்டத்தில் இன்று 52 வழிபாட்டுத் தலங்களுக்கு RM1.04 மில்லியன் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதி சமய, கலாசார, ஆன்மிக மற்றும் சமூக மேம்பாட்டு நடவடிக்கைகளை வலுப்படுத்த பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெறும் நிதி ஒதுக்கீடுகளை அறிவிப்பது மட்டுமல்லாமல், ஒவ்வொரு நிதியும் மக்களைச் சென்றடைந்து, அவர்கள் கல்வி கற்கவும், வாழ்க்கையை மேம்படுத்தவும், தொழில்களை வளர்க்கவும், சமூகங்களை வலுப்படுத்தவும் வாய்ப்புகளை உருவாக்குவதே மடானி அரசாங்கத்தின் அணுகுமுறை என ராமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார். இந்திய சமூகத்தின் வளர்ச்சி அனைவரையும் உள்ளடக்கிய, ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் பயனுள்ள முறையில் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

Scroll to Top