09 ஆகஸ்ட் 2026 : கொசோவோ நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட பரபரப்பான சம்பவத்தைத் தொடர்ந்து, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அந்நாட்டின் செயல் பிரதமர் அல்பின் குர்தி மீது முட்டைகளை வீசியதால் நாடாளுமன்ற அமர்வு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
புதிய நாடாளுமன்ற சபாநாயகர் வேட்பாளரை முன்மொழிவதற்கு மேலும் கால அவகாசம் தேவைப்படுவதாக குர்தி தெரிவித்ததைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் இடம்பெற்றது. நாடாளுமன்றத்தில் புதிய நிர்வாகத்தை அமைப்பது தொடர்பாக நீடித்து வரும் அரசியல் முட்டுக்கட்டைக்கு மத்தியில் இந்தக் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
Alliance for the Future of Kosovo கட்சியைச் சேர்ந்த எதிர்க்கட்சி எம்.பி. டைம் காட்ரிஜாஜ், குர்தியை நோக்கி முட்டைகளை வீசியதுடன் எதிர்ப்பையும் வெளிப்படுத்தினார். இதையடுத்து பாதுகாப்புப் பணியாளர்கள் தலையிட்டு அவரை அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.
கடந்த ஜூன் 7-ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், புதிய அரசாங்கத்தை அமைப்பதில் தொடர்ந்து சிக்கல் நிலவி வருகிறது. குர்தியின் Vetëvendosje கட்சி 120 இடங்களில் 53 இடங்களைப் பெற்றுள்ள நிலையில், ஆட்சியமைக்க எதிர்க்கட்சிகளின் ஆதரவு தேவைப்படுகிறது. நாடாளுமன்றத்தில் நிலவும் அரசியல் முட்டுக்கட்டை நீடித்து வரும் நிலையில், புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.






