06 ஆகஸ்ட் 2026 : தேசிய தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு கெலானா ஜெயாவின் எஸ்.எஸ்.4 பகுதியில் பொதுமக்களுக்கு ஜாலூர் கெமிலாங் தேசியக் கொடிகளை வழங்கிய ஜனநாயக செயல் கட்சியின் (DAP) தேசியத் தலைவர் கோபிந்த் சிங் டியோ, சமூக நிகழ்ச்சிகளை முன்னெடுக்க RM10,000 நிதியுதவியையும் வழங்கினார்.
செம்பாக்கா சந்தையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்குப் பின்னர் எஸ்.எஸ்.4 கெலானா ஜெயாவிற்கு சென்ற அவர், அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடி தேநீர் அருந்தியதுடன், தேசிய தினக் கொண்டாட்டத்தின் உற்சாகத்தை மக்களிடையே பரப்பும் நோக்கில் தேசியக் கொடிகளை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, வரவிருக்கும் சுதந்திர தின நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதற்காக RM10,000 மதிப்பிலான காசோலையை அப்பகுதி அமைப்பினரிடம் வழங்கினார்.
இந்த நிதியுதவி, தேசப்பற்று மற்றும் ஒற்றுமையை வலுப்படுத்தும் சமூக நிகழ்ச்சிகளை முன்னெடுக்க உதவும் என்றும், இதுபோன்ற முயற்சிகள் மக்களிடையே நல்லிணக்கம், பரஸ்பர அன்பு மற்றும் ஒற்றுமை உணர்வை மேலும் வலுப்படுத்தும் என்றும் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.






