என் தமிழ்

’63 நாயன்மார்கள் திருமுறை திட்டம்’ அறிமுகம் : மலேசிய இந்து சங்கம் புதிய முயற்சி

பினாங்கு, 07 ஆகஸ்ட் 2026 : 48-ஆவது திருமுறை பாராயண விழா 2026 நிறைவு விழாவில், மலேசிய இந்து சங்கம் பினாங்கு மாநிலக் கிளை (MHSPSC) சார்பில் “63 நாயன்மார்கள் திருமுறை திட்டம்” அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. பினாங்கு மாநில அரசின் ஆட்சிக்குழு உறுப்பினரும், பேராய் சட்டமன்ற உறுப்பினருமான டத்தோ ஸ்ரீ சுந்தரராஜூ சோமு, சிறப்பு விருந்தினர்களுடன் இணைந்து இந்தத் திட்டத்தை தொடக்கி வைத்தார்.

திருமுறை பாரம்பரியத்தைப் பாதுகாத்து, பரப்பி, மேலும் வலுப்படுத்தும் நீண்டகால நோக்குடன் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். 63 நாயன்மார்களின் இறையன்பு மற்றும் சைவ மரபை முன்மாதிரியாகக் கொண்டு, எதிர்கால தலைமுறையினரிடம் திருமுறையின் ஆன்மிகப் பண்புகள், சைவ சமயப் பாரம்பரியம் மற்றும் அதன் உயரிய போதனைகளை கொண்டு சேர்ப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.

இந்த புதிய முயற்சி, திருமுறை பாராயண விழாவின் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என்றும், அடுத்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக திருமுறை மரபு, இளைஞர்களையும் பக்தர்களையும் தொடர்ந்து ஊக்குவிக்கும் வகையில் வளர்ச்சி பெறும் என்ற நம்பிக்கையையும் மலேசிய இந்து சங்கம் பினாங்கு மாநிலக் கிளை தெரிவித்துள்ளது.

“திருமுறை ஒலிக்கட்டும்… சைவம் தழைக்கட்டும்!” என்ற முழக்கத்துடன் நிறைவடைந்த இந்நிகழ்ச்சி, சைவ சமய பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் முக்கிய முயற்சியாகப் பாராட்டப்பட்டது.

Scroll to Top