பினாங்கு, 04 ஆகஸ்ட் 2026 : 2026 சர்வதேச சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில் தைப்பிங் எஸ்.ஜே.கே.(த) செயின்ட் தெரசா கான்வென்ட் பள்ளியைச் சேர்ந்த இரண்டு மாணவிகள் நான்கு பதக்கங்களை வென்று பள்ளிக்கும் மலேசியாவிற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 2 வரை பினாங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் (USM) நடைபெற்ற இந்தப் போட்டியில் 10 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். போட்டியில் பிரசாந்தினி பிரசாத், 40–45 கிலோ எடைப் பிரிவு காம்பாட் பிரிவில் வெள்ளிப் பதக்கமும், தனித்திறமை (Thanithiramai) பிரிவில் வெண்கலப் பதக்கமும் வென்று சிறப்பித்தார்.
அதேபோல், அக்ஷயா பிரசாத் 40–45 கிலோ எடைப் பிரிவு காம்பாட் போட்டியிலும், தனித்திறமை பிரிவிலும் தலா ஒரு வெண்கலப் பதக்கத்தை வென்றார். இரு மாணவிகளின் இந்த சர்வதேச வெற்றி, பள்ளிக்கும் நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், அவர்களின் அர்ப்பணிப்பு, ஒழுக்கம் மற்றும் கடின உழைப்பு மற்ற மாணவர்களுக்கு முன்மாதிரியாக அமையும் என்றும், எதிர்காலத்தில் மேலும் பல சர்வதேச வெற்றிகளைப் பெற வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன.






