என் தமிழ்

‘தீபாவளி பங்சா ஜோகூர் 2026’ கொண்டாட்டம் : இந்தியச் சமூகத்திற்கு RM5.37 மில்லியன் நிதி ஒதுக்கீடு

ஜோகூர், 02 நவம்பர் 2026 : ஜோகூர் மாநிலத்தில் தீபாவளியை முன்னிட்டு, உணவுப் பொருள் உதவிக்காக 3.5 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தம்போய் இந்தா பகுதியில் நடைபெற்ற ‘தீபாவளி பங்சா ஜோகூர் 2026’ கொண்டாட்டத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஜோகூர் மாநில முதலமைச்சர் டத்தோ ஓன் ஹபிஸ் காசி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு விழாவை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார்.

தீபாவளி பண்டிகையை அனைத்து மக்களும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் மாநில அரசு பல்வேறு உதவித் திட்டங்களை முன்னெடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, தீபாவளியை முன்னிட்டு உணவுப் பொருள் கூடைகள் வழங்க 3.5 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், மாநிலம் முழுவதும் 63 இடங்களில் 54,000 ‘கொம்போ காசிஹ்’ தொகுப்புகளை வழங்குவதற்காக ‘ஜுவால் காசிஹ் ஜோகூர்’ திட்டத்தின் கீழ் 1.87 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் ஜோகூர் மாநில ம.இ.கா. தலைவர் ரவின் குமார் கிருஷ்ணசாமி மற்றும் சுல்தானா ரோகாயா அறக்கட்டளையின் தலைவர் டத்தோ சுகுமாரன் ராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஜோகூர் மாநில இந்தியச் சமூகத்தின் நலன், கல்வி மற்றும் தொழில்முனைவோர் வளர்ச்சிக்காக சுல்தானா ரோகாயா அறக்கட்டளை தொடர்ந்து பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது.

பல்வேறு இன மக்களும் ஒன்றிணைந்து கொண்டாடிய இந்த நிகழ்ச்சி, ஜோகூர் மாநிலத்தில் நிலவும் இன நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது. தீபாவளியை முன்னிட்டு இந்தியச் சமூகத்தினருக்கு ஆதரவளித்து வரும் மாநில அரசுக்கும், விழா சிறப்பாக நடைபெறப் பங்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

Scroll to Top