நெகிரி செம்பிலான், 28 ஜூலை 2026 : நெகிரி செம்பிலானின் லுகுட் தொகுதியில் நடைபெற்ற பக்காத்தான் ஹராப்பான் தேர்தல் பிரசார இரவு விருந்தில் தேசியத் தலைவர் கோபிந்த் சிங் டியோ பங்கேற்று, N30 லுகுட் தொகுதி வேட்பாளர் சூ கேன் ஹ்வாவுக்கு தனது ஆதரவை வெளிப்படுத்தினார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்கள் அனைவரும் அமைதியான, வளமான மற்றும் முன்னேற்றமிக்க நெகிரி செம்பிலானை உருவாக்கும் ஒரே நோக்கத்துடன் மக்களிடம் வாக்கு கேட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.
தங்களது வேட்பாளர்கள் இனவாத அரசியலை நம்பாமல், சேவை மற்றும் திறமையை அடிப்படையாகக் கொண்டு மக்களின் நம்பிக்கையைப் பெற விரும்புவதாகக் கூறிய கோபிந்த் சிங் டியோ, PAS கட்சித் தலைவர் டத்தோ ஸ்ரீ முகமது சனுசி முகமது நோரின் இனவாத கருத்துக்களை கடுமையாக விமர்சித்தார்.
மலேசியா அனைத்து இன மக்களுக்கும் சொந்தமான நாடு என்றும், சமூக ஒற்றுமையை சீர்குலைக்கும் எந்தவொரு அரசியலையும் மக்கள் நிராகரிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
நெகிரி செம்பிலான் மக்களுக்கு இனம், மதம், மொழி என்ற பாகுபாடின்றி சேவை செய்ய உறுதியுடன் இருப்பது பக்காத்தான் ஹராப்பான் மட்டுமே என்றும், மாநிலத்திற்கு சிறந்த தலைமையை வழங்க தங்கள் கூட்டணி உறுதிபூண்டுள்ளதாக கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.






