என் தமிழ்

காமன்வெல்த் விளையாட்டு 2026 : கிளாஸ்கோவில் மலேசிய வீரர்களை சந்தித்து ஊக்கமளித்த அதிகாரிகள்

25 ஜூலை 2026 : கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றுள்ள மலேசிய தேசிய அணியினரை, மலேசிய இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தின் துணைப் பொதுச் செயலாளர் சான் ஹொங் ஜின் நேரில் சந்தித்து உற்சாகப்படுத்தினார்.

இந்தச் சந்திப்பின் போது, போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு மலேசியாவுக்கு அதிக பதக்கங்களை வென்று பெருமை சேர்க்க வேண்டும் என்று அவர் வீரர், வீராங்கனைகளுக்கு வாழ்த்துத் தெரிவித்தார். ஒவ்வொரு வீரரும் தங்களது முழுத் திறமையையும் வெளிப்படுத்தி நாட்டின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார்.

மலேசிய ஒலிம்பிக் கவுன்சில் தலைவர் டான் ஸ்ரீ டத்தோ ஸ்ரீ (டாக்டர்) முகமட் நோர்சா ஜகாரியாவும் இந்நிகழ்வில் பங்கேற்று, சர்வதேச அரங்கில் தைரியமாக போட்டியிட்டு நாட்டிற்கு பெருமை சேர்க்குமாறு வீரர்களுக்கு ஊக்கமளித்தார்.

மேலும், மலேசிய அணியின் தலைமைப் பொறுப்பாளர் டத்துக் அவாலான் அப்துல் அசீஸ், தேசிய விளையாட்டு மன்றத்தின் தலைமை இயக்குநர் ஜெஃப்ரி ஙாடிரின், மலேசிய பாராலிம்பிக் கவுன்சிலின் பொதுச் செயலாளர் டத்தோ சுப்ரமணியம் ராமன் நாயர் மற்றும் தேசிய விளையாட்டு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் வெள்ளப்பாண்டியன் பொன்னுசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு வீரர்களுக்கு தங்களது ஆதரவையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.

2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் மலேசிய அணி சிறப்பான சாதனைகளைப் படைத்து நாட்டிற்கு பெருமை சேர்க்கும் என்ற நம்பிக்கையை அனைத்து தரப்பினரும் வெளிப்படுத்தினர்.

Scroll to Top