புதுடெல்லி, 25 ஜூலை 2026 : நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தைத் தொடர்ந்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில், இது தொடர்பாக மத்திய அரசு இன்று முக்கிய முடிவை எடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வரும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (CJP) மற்றும் மாணவர் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தையை நேற்று நடத்தியது. இந்த பேச்சுவார்த்தையில் மத்திய அரசின் சார்பில் ஜே.பி. நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் ஆகியோர் பங்கேற்றனர். CJP சார்பில் சவுரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனையில், தேர்வு சீர்திருத்தம், மாணவர்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறுதல், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
பேச்சுவார்த்தைக்குப் பிறகு பேசிய CJP தலைவர்கள், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பதவி விலகல் தங்களின் முக்கிய மற்றும் மாற்ற முடியாத கோரிக்கை என்றும், அதற்கு பதிலளிக்க இன்று பிற்பகல் வரை மத்திய அரசு அவகாசம் கேட்டுள்ளதாக தெரிவித்தனர். மற்ற இரண்டு கோரிக்கைகளான போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெறுவது மற்றும் நீட் விவகாரத்தில் உயிரிழந்ததாகக் கூறப்படும் மாணவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து கொள்கை ரீதியில் அரசு சாதகமான அணுகுமுறையை வெளிப்படுத்தியதாகவும் அவர்கள் கூறினர்.
இதற்கிடையில், தர்மேந்திர பிரதானின் பதவி குறித்து மத்திய அரசு என்ன முடிவு எடுக்கிறது என்பது நாடு முழுவதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று நடைபெறவுள்ள அடுத்த கட்ட சந்திப்பில் அரசின் அதிகாரப்பூர்வ பதில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.






