புத்ராஜெயா, 22 ஜூலை 2026 : சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஆசியா மற்றும் பசிபிக் பிராந்திய துணை இயக்குநர் ரூபா தத்தாகுப்தா தலைமையிலான குழு, நான்கு நாள் அதிகாரப்பூர்வ பயணமாக மலேசியாவுக்கு வருகை தந்து, நிதி அமைச்சகத்தில் உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
புத்ராஜெயாவில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், கருவூலத் துறையின் தலைமைச் செயலாளர் டான் ஸ்ரீ ஜோகன் மஹ்மூத் மெரிக்கானை IMF குழுவினர் மரியாதை நிமித்தமாகச் சந்தித்தனர். தொடர்ந்து, கருவூலத் துறையின் துணைச் செயலாளர் (கொள்கை) டத்தோ ஜம்சூரி அப்துல் அசீஸ் தலைமையில் ஆண்டு தொழில்நுட்பக் கூட்டமும் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் கருவூலத் துறையின் நிதி மற்றும் பொருளாதாரப் பிரிவு, வரித்துறை, தேசிய வரவு-செலவுத் திட்ட அலுவலகம் மற்றும் மானியப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் அதிகாரிகள் பங்கேற்றனர்.
உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற சூழ்நிலைக்கு மத்தியில், மலேசியாவின் நிதிசார் செயல்திறன் மற்றும் பொருளாதார முன்னோக்கு குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. மேலும், அரசின் நிதிநிலை, வருவாய் வளர்ச்சி, மானிய சீர்திருத்தம் மற்றும் உலக பொருளாதார தாக்கங்களை சமாளிக்கும் நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
அதேவேளை, இதுபோன்ற பொருளாதாரச் சவால்களை எதிர்கொள்ளும் பிற நாடுகளின் அனுபவங்களை IMF மூலம் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பையும் இந்தக் கலந்துரையாடல் மலேசியாவுக்கு வழங்கியதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.






