20 ஜூலை 2026 : மலேசிய பொதுப்பணித் துறை (ஜே.கே.ஆர்.), சபா ஜே.கே.ஆர். மற்றும் சரவாக் ஜே.கே.ஆர். ஆகியவற்றுக்கு இடையிலான மூலோபாய ஒத்துழைப்பு, நாடு முழுவதும் நடைபெற்று வரும் மேம்பாட்டுத் திட்டங்களை விரைவாகவும் திறம்படவும் செயல்படுத்துவதற்கு மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளது.
திட்டங்களின் செயல்பாட்டில் ஏற்படும் தாமதங்கள் மற்றும் பல்வேறு சவால்களுக்கு ஒருங்கிணைந்த தீர்வுகளை காண்பதற்காக, சம்பந்தப்பட்ட அனைத்து செயல்பாட்டு அமைப்புகளும் ஒரே மேடையில் இணைந்து செயல்படுவது மிகவும் அவசியம் என்று பொதுப்பணித் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி தெரிவித்தார். குறிப்பாக பான் போர்னியோ நெடுஞ்சாலை உள்ளிட்ட முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்கள் தடையின்றி முன்னேற இந்த ஒத்துழைப்பு முக்கிய பங்காற்றும் என்றும் அவர் கூறினார்.
கோத்தா கினபாலுவில் நடைபெற்ற மலேசிய பொதுப்பணித் துறையின் மூலோபாய ஒத்துழைப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், திட்டங்களில் எழும் பிரச்சினைகளுக்கு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் இணைந்து தீர்வு காணும் பண்பை இந்த ஒத்துழைப்பு மேலும் வலுப்படுத்தும் என்றார்.
இந்நிகழ்வில், சபா மற்றும் சரவாக்கில் ‘மைபிம்’ (MyBIM) மலேசிய ஆய்வகங்களை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்திடப்பட்டது. மேலும், சாலைச் சொத்து தொடர்பான தரவுகளை முறையாகவும் ஒருங்கிணைந்த வகையிலும் நிர்வகிக்கும் நோக்கில் ‘சாலைச் சொத்து தரவு பிரகடனம்’ வெளியிடப்பட்டது.
மூன்று நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், கூட்டாட்சி, சபா மற்றும் சரவாக் மாநிலங்களைச் சேர்ந்த கட்டுமானத் துறையின் உயர்மட்ட நிர்வாகிகள் மற்றும் தொழில்நுட்ப அதிகாரிகள் உட்பட சுமார் 140 பேர் பங்கேற்றுள்ளனர். அடுத்த கட்ட ஒத்துழைப்பு நிகழ்ச்சி அடுத்த ஆண்டு மலேசியத் தீபகற்பத்தில் நடைபெறவுள்ளது.






