என் தமிழ்

CJP கட்சியினர் இன்று நாடாளுமன்றம் நோக்கிப் பேரணி: டெல்லியில் பலத்த பாதுகாப்பு

புதுடெல்லி, 20 ஜூலை 2026 : நீட் உள்ளிட்ட தேசிய அளவிலான தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றம்சாட்டி, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (Cockroach Janata Party – CJP) சார்பில் இன்று நாடாளுமன்றம் நோக்கிப் பேரணி நடத்தப்பட உள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கும் நிலையில், இந்தப் பேரணிக்கு அனுமதி வழங்கப்படவில்லை என டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. அனுமதியின்றி பேரணியில் ஈடுபட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது. இதையடுத்து, நாடாளுமன்ற வளாகம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, கூடுதல் போலீசார் மற்றும் விரைவு நடவடிக்கைப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

எனினும், திட்டமிட்டபடி பேரணி நடைபெறும் என கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். பேரணியில் பங்கேற்போர் தேசியக் கொடியை மட்டும் ஏந்தி வர வேண்டும் என்றும், எந்த அரசியல் கட்சிக் கொடிகளையும் கொண்டு வரக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், போராட்டம் அமைதியான முறையில் நடைபெற வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் முன்னெடுத்து வரும் இந்த இயக்கம், தேர்வுக் கசிவுகள், வேலைவாய்ப்பின்மை மற்றும் கல்வி முறையில் சீர்திருத்தம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கடந்த சில வாரங்களாக நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Scroll to Top