கோலாலம்பூர், 19 ஜூலை 2026 : இந்து சமயத்தை அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தும் முயற்சிகளையும், சமய உணர்வுகளைத் தூண்டும் பொறுப்பற்ற செயல்களையும் மலேசிய இந்து சங்கம் கடுமையாகக் கண்டித்துள்ளது.
சங்கத்தின் தேசியத் தலைவர் ஸ்ரீ காசி சங்கப்பிள்ளை தங்கமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், சமீபகாலமாக இந்து சமயம் தொடர்பான விவகாரங்கள் அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்தப்படுவது வருத்தமளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்து சமயம் அமைதி, ஒற்றுமை மற்றும் பரஸ்பர மரியாதையை வலியுறுத்தும் உயரிய நெறிகளை கொண்டது என்றும், அந்த மதத்தின் புனிதத்தன்மையையும் கண்ணியத்தையும் குலைக்கும் எந்தவொரு நடவடிக்கையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மதம் தொடர்பான கருத்து வேறுபாடுகள் அல்லது பிரச்சினைகள் ஏற்பட்டால், அவற்றை சட்டத்தின் வழியிலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் மூலம் அமைதியான முறையிலும் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்றும், பொதுமக்கள் உணர்ச்சிவசப்பட்டு செயல்படவோ, சமூக ஊடகங்களில் ஆதாரமற்ற தகவல்களைப் பரப்பவோ கூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
குறிப்பாக இந்து சமூகத்தினர் எவருடைய தூண்டுதலுக்கும் ஆளாகாமல், ஒற்றுமையுடன் செயல்பட்டு நாட்டின் நல்லிணக்கத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றும், பல இன, பல மத சமூகங்களைக் கொண்ட மலேசியாவில் பரஸ்பர மரியாதையும் சமூக நல்லிணக்கமும் தொடர்ந்து நிலைத்திருக்க அனைவரும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், மத உணர்வுகளைத் தூண்டி சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் எந்தவொரு நடவடிக்கைக்கும் எதிராக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சட்டத்தின் ஆட்சியை மதித்து அனைத்து தரப்பினரும் செயல்படுவது நாட்டின் ஒற்றுமைக்கும் சமூக அமைதிக்கும் அவசியம் என்றும் மலேசிய இந்து சங்கம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.






