என் தமிழ்

மக்களின் கருத்துகளை நேரடியாக அறிய AI ‘அவதார் அன்வார்’ அறிமுகம்

கோலாலம்பூர், 19 ஜூலை 2026 : பொதுமக்களுடன் தொடர்பை மேலும் விரிவுபடுத்தவும், அவர்களின் கருத்துகள் மற்றும் எதிர்பார்ப்புகளை எளிதாக அறிந்து கொள்ளவும், மலேசிய பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான தனது டிஜிட்டல் உருவமான ‘அவதார் அன்வார்’ (Avatar Anwar) சேவையை அறிமுகப்படுத்தியுள்ளார்.

தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட காணொளி மூலம் இந்த புதிய முயற்சியை அறிமுகப்படுத்திய அவர், எந்தவொரு தலைவரும் எல்லா இடங்களிலும், எல்லா நேரங்களிலும் நேரில் இருக்க முடியாது என்பதால், மக்களின் குரலை தொடர்ந்து கேட்கவும், அவர்களின் விருப்பங்களையும் கருத்துகளையும் புரிந்துகொள்ளவும் செயற்கை நுண்ணறிவு புதிய வாய்ப்பை உருவாக்கியுள்ளதாக தெரிவித்தார்.

‘அவதார் அன்வார்’ என்பது வெறும் டிஜிட்டல் கதாபாத்திரம் அல்ல என்றும், மக்களுடன் தொடர்ந்து இணைந்து, அவர்களின் பிரச்சினைகளைக் கேட்டு, உதவி செய்து, சேவையாற்றும் தனது டிஜிட்டல் நீட்சியாக இது செயல்படும் என்றும் அவர் கூறினார்.

மலேசியா பல இனங்கள் மற்றும் பல்வேறு கலாச்சாரங்களை கொண்ட நாடு என்பதால், இளைஞர்கள், பெற்றோர், முதியோர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்புகளும் அரசுக்கு முக்கியமானவை என்றும், மக்கள் தங்களது கருத்துகள், கவலைகள் மற்றும் எதிர்காலம் குறித்த விருப்பங்களை இந்த ஏஐ அவதார் வழியாக பகிர்ந்து கொள்ளுமாறும் அவர் அழைப்பு விடுத்தார்.

மேலும், அறிவு, நேர்மை மற்றும் கடின உழைப்பை அடிப்படையாகக் கொண்டு நாட்டின் எதிர்காலத்தை இணைந்து உருவாக்க இந்த புதிய டிஜிட்டல் தளத்தை மக்கள் பயன்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் அன்வார் வலியுறுத்தினார். பொதுமக்கள் வாட்ஸ்அப் வழியாகவும் ‘அவதார் அன்வார்’ சேவையை அணுகி தங்களது கருத்துகளை பகிர முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Scroll to Top