என் தமிழ்

அரசுப் பணியில் இந்திய இளைஞர்கள் அதிகம் இணைய வேண்டும் : யுனேஸ்வரன் ராமராஜ் அழைப்பு

செகாமாட், 19 ஜூலை 2026 : அரசுப் பணியில் சேருவதற்கு இந்திய இளைஞர்கள் அதிக ஆர்வம் காட்ட வேண்டும் என்றும், அதற்கான வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் துணை அமைச்சர் யுனேஸ்வரன் ராமராஜ் வலியுறுத்தினார்.

ஜொகூர் மாநிலம் செகாமாட்டில் உள்ள ஜெமென்தா பல்நோக்கு மண்டபத்தில் நடைபெற்ற ‘ஜாலினான் மெஸ்ரா பெர்சாமா மஸ்யாரகாட் செகாமாட்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், பட்டதாரிகள் மற்றும் எஸ்.பி.எம்., எஸ்.டி.பி.எம். முடித்த இளைஞர்களுக்கு அரசுப் பணியில் சேர்வதற்கான விண்ணப்ப நடைமுறைகள், தகுதிகள், தேர்வுத் தயாரிப்பு மற்றும் நேர்முகத் தேர்வு குறித்த வழிகாட்டுதல்களை வழங்கும் நோக்கில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

அரசுப் பணிக்கான வாய்ப்புகள் குறித்து நேரடி விளக்கங்கள் கிடைப்பதன் மூலம், குறிப்பாக இந்திய சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களின் தன்னம்பிக்கை அதிகரித்து, அரசுத் துறையில் பணியாற்றும் ஆர்வம் மேலும் உயரும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார்.

இந்த நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்த ஒத்துழைப்பு வழங்கிய புத்ராஜெயா இந்திய அரசுப் பணியாளர் சங்கம் (IMAIYAM) மற்றும் செகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு அவர் நன்றி தெரிவித்தார்.

மேலும், மலேசிய அரசுப் பணியாளர் ஆணையத்தின் ஆணையர் எஸ். லெட்சுமணன் சண்முகம் மற்றும் சுகாதார அமைச்சின் இணைச் சுகாதார சேவைகள் பிரிவு உதவி இயக்குநர் சரவணகுமார் மணியம் ஆகியோர் சிறப்பு பேச்சாளர்களாக கலந்து கொண்டு தங்களது அனுபவங்களையும் வழிகாட்டுதல்களையும் பகிர்ந்துகொண்டதாக அவர் கூறினார்.

அதேவேளை, NADI, மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, சுகாதார அமைச்சு, அரசுப் பணியாளர் ஆணையம் (SPA) உள்ளிட்ட பல்வேறு அரசு அமைப்புகள், நிறுவனங்கள் மற்றும் சீருடைப் படைகளின் தகவல் அரங்குகள் அமைக்கப்பட்டு, பங்கேற்பாளர்கள் அரசுப் பணிக்கான வேலைவாய்ப்புகள் மற்றும் தொழில் வாய்ப்புகள் குறித்து நேரடியாக தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்கள், அரசு அமைப்புகள், ஏற்பாட்டாளர்கள் மற்றும் இளைஞர்கள் அனைவருக்கும் யுனேஸ்வரன் ராமராஜ் தனது நன்றியைத் தெரிவித்தார்.

Scroll to Top