தெரெங்கானு, 06 ஜூலை 2026 : பசுமைத் தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்ப, தொழிற்கல்வி மற்றும் பயிற்சித் துறைகளில் முதலீடுகளை ஈர்க்கும் திறன் மலேசியாவுக்கு அதிகளவில் இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இதன் மூலம், எதிர்காலத் தொழில்துறையின் தேவைகளுக்கு ஏற்ப உயர்திறன் கொண்ட மனிதவளத்தை உருவாக்கும் முக்கிய நாடாக மலேசியா திகழும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
மலேசியாவுக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதர் ரஃபேல் டேர் கூறுகையில், மாணவர் பரிமாற்றத் திட்டங்கள் உள்ளிட்ட கல்வி ஒத்துழைப்பின் மூலம் மலேசியாவுடனான உறவு மேலும் வலுப்பெற்று வருவதாக தெரிவித்தார். குறிப்பாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் எராஸ்மஸ் கல்வித் திட்டம், மலேசிய மாணவர்களுக்கு ஐரோப்பிய நாடுகளில் உயர்கல்வி பயிலும் வாய்ப்பை வழங்கி வருவதாக அவர் கூறினார்.
தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி பயிற்சிக்கு மலேசியா அளித்து வரும் முக்கியத்துவம், எதிர்காலத் தொழில்துறைக்குத் தேவையான திறன்மிக்க பணியாளர்களை உருவாக்க உதவும் என்றும் அவர் குறிப்பிட்டார். கல்வி மற்றும் மக்களுக்கிடையேயான தொடர்புகளை வலுப்படுத்துவது இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், உலக நாடுகளுடனான கல்வி மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை விரிவுபடுத்தும் ஐரோப்பிய ஒன்றியத்தின் முயற்சியில் மலேசியா முக்கிய மூலோபாயக் கூட்டாளியாக திகழ்கிறது என்றும் ரஃபேல் டேர் தெரிவித்தார்.






