என் தமிழ்

48ஆவது திருமுறை ஓதுதல் விழா : 150 மாணவர்கள் பங்கேற்புடன் நிபோங் திபாலில் சிறப்பாக நிறைவு

பினாங்கு, 06 ஜூலை 2026 : மலேசிய இந்து சங்கம், நிபோங் திபால் வட்டார மன்றத்தின் ஏற்பாட்டில் 48ஆவது திருமுறை ஓதுதல் விழா, நிபோங் திபாலில் உள்ள தமிழ்ப்பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் 150 மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்று, சைவ சமய பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் திருமுறைகளை பக்தியுடன் ஓதி தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.

விழாவின் நிறைவு நிகழ்வில் மலேசிய இந்து சங்கம் பினாங்கு மாநிலத் தலைவர் விவேக ரத்னா தர்மன் ஆனந்தன் தலைமையேற்று விழாவை நிறைவு செய்து வைத்தார். மாநில துணைத் தலைவர் விவேக ரத்னா நளினி தேவி, விவேக ரத்னா பொன். கோங்கொடி, நிபோங் திபால் வட்டார மன்றத் தலைவர் ஜெகதேசன் மற்றும் வட்டார மன்ற ஆலோசகர் எஸ்.ஓ. அப்பன் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் உரையாற்றிய தர்மன் ஆனந்தன், பள்ளி நேரத்திலேயே சமயக் கல்வி வகுப்புகளை நடத்த கல்வி அமைச்சு அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை சமயக் கல்வி வகுப்புகளில் கட்டாயம் பங்கேற்கச் செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இந்த விழாவை வெற்றிகரமாக நடத்த பங்களித்த நிபோங் திபால் வட்டார மன்றத் தலைவர், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு பாராட்டுகளும் நன்றிகளும் தெரிவிக்கப்பட்டன.

Scroll to Top